இன்றைய நவீன உலகில் நோய்கள் அதிகரித்திருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்தும் நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளும், கருவிகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நூல் நாம் அறியாத பல புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், கருவிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
மாரடைப்பு நோயைக் குணப்படுத்த ஸ்டென்ட் பொருத்துவார்கள். இந்த ஸ்டென்ட்டைச் சரியாகப் பொருத்துவதற்கு ரத்தக்குழாயின் உட்பகுதியைத் தெரிந்து கொள்ள பயன்படும் "ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி தொழில்நுட்பம்' பற்றி இந்நூல் விளக்குகிறது. இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் இதயத்தை எடுத்துப் பொருத்துவார்கள். ஆனால், அந்த இதயத்தை 6 மணி நேரத்துக்குள் பொருத்திவிட வேண்டும். பொருத்தாவிட்டால் அந்த இதயம் சேதம் அடைந்துவிடும். "டீசெல்லுரைசேசன்' என்ற முறையில் அப்படி சேதம் அடைந்த இதயத்தை முழு வளர்ச்சி அடையும்படி செய்ய முடியும் என்கிறார் நூலாசிரியர். இப்படிப்பட்ட பல புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயாளியின் வலது பக்க கீழ் முதுகில் நியூரோஸ்டுமுலேட்டர் என்ற கருவியைப் பொருத்துவது, 10 டாக்டர்கள், 20 நர்ஸ்கள் செய்யும் வேலையைச் செய்யும் ரோபோ டாக்டர், புற்றுநோயை அறிய உதவும் "பெட்' ஸ்கேன் முறை, வழுக்கைத் தலையில் முடி முளைக்க வைக்கும் சிகிச்சைக்காக வரும் நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தோலில் செலுத்தி முடி முளைக்க வைக்கும் பி.ஆர்.பி.டெக்னாலஜி முறை, இயற்கையான கால்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள பயோனிக் கால்கள் என பல வியக்க வைக்கும் மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய இந்நூல், மருத்துவத்தில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
Be the first to rate this book.