புத்தகங்கள் வாங்குவதில் நான் கடைபிடிக்கும் முக்கியமான உத்தி, உடனடியாக படிக்கத் தூண்டும் புஸ்தகங்களை மட்டும் வாங்கி, உடனடியாகப் படித்து விடுவது. குண்டு புஸ்தகங்களின் விலையில், அழகில் மயங்கி, வாங்கி, அலமாரியை ரொப்புவதில், உடன்பாடு இருப்பதில்லை. அப்படி, இந்த வருடம் செ.பு.க.காட்சியில், கிழக்கின் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்களில், என் டேஸ்ட்டுக்குத் தேறியவை மிக மிகச் சிலவே. D-60 இன் புதிய வெளியீடாக வந்திருக்கும், மார்க்கெட்டிங் மாயாஜாலம், ஒரு நல்ல புஸ்தகம் என்று சொல்வது understatement. இந்தப் புத்தகத்தை, துட்டு கொடுத்து வாங்கி, ஒரு மூலையில் உட்கார்ந்து பாராயணம் செய்தால், மார்க்கெட்டிங்கில் ஓஹோவென்று ஜொலிக்கலாம் என்று சொல்வது மிகை. ஆனால் ஏதாச்சும் சொல்லியே ஆகவேண்டும். என்ன சொல்வது?
படித்து முடித்ததும் எனக்குத் தோன்றிய முதல் அபிப்ராயம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, போட்டு பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்பதே. Extraodinary work. ஒரு இடம் கூட தொய்வடையாமல், buzzwords போட்டு போரடிக்காமல், நீள நீள அத்தியாயங்கள் இல்லாமல், சொல்ல வந்ததை, சுவாரசியமாகச் சொல்லி இருப்பது, இம்மாதிரி முயற்சிகளின் வெற்றிக்கு, மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்பது தெளிவாகப் புரிகிறது.
மார்க்கெட்டிங் என்பதை பற்றி, பாடபுத்தகங்கள் சொல்கிற அதே வழமையான விஷயங்கள், இங்கே அத்தியாயம் வாரியாக அலசப்படுகிறது, நாம் எளிதில் இனங்கண்டு கொள்ளக் கூடிய, பல லோக்கல் உதாரணங்களுடன். பல முக்கியமான உத்திகள் கூட, நமக்கு மிகவும் பரிச்சயமான, நிர்மா வாஷிங் பவுடர், சன் டீவி, ஹமாம் சோப், கவின் கேர் போன்ற பொருட்களை வைத்து உதாரணம் வழங்கப் படுகிறது. சில புத்தகங்களை அடிப்படையாக வைத்து எழுதாமல், தன்னுடைய மார்க்கெடிங் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களின் சாரத்தை, இதிலே இறக்கி இருக்கிறார்.
புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக நினைப்பது
* பிலிப் கோட்லர் துவங்கி, அத்தனை மார்க்கெடிங் தாதாக்களையும், இந்த புத்தகம் ஓரங்கட்டி விடும், கோடிக்கணக்கில் பணாம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் ஓவர் பந்தா விடாமல் இருந்தது.
* மக்கள் மனசில் இருக்கும் பிராண்டுகள், பொருட்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை மட்டுமே, உதாரணமாகக் காட்டி, சொல்கிற விஷயத்துடன் நம்மை உடனடியாக identify செய்ய வைப்பது. பல இடங்களில், ‘ அட ஆமா இல்லே…’ என்று எளிதில் ஆமோதிக்க வைப்பது.
* முக்கியமான சப்ஜெக்ட் பேசுகிறேன் பேர்வழி என்று, பக்கம் பக்கமாக, படங்கள், சார்ட்டுகள், புள்ளிவிவரப் பட்டியல் போட்டு, லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருந்தது.
* பாட புத்தகங்கள் சொல்கிற அதே வரிசையில் , அடிப்படை விஷயங்கள் அனைத்தையும், கோர்வையாக, முன்னுக்குப் பின் முரண்படாமல் சொன்னது. tradition இல் இருந்து வழுவாமல் இருந்தது.
* பிற்சேர்க்கை, பிபிலியோகிரா·பி என்று மூன்று பக்கங்களுக்கு, புஸ்தகங்களின் பெயர்கள், இணையச் சுட்டிகளை அடுக்காமல் இருந்தது.
* சதீஷ¤க்கு, நகைச்சுவை உணர்வு அதீதமாக இருக்கிறது என்பது சில இடங்களில் புரிகிறது. ஆனாலும், எடுத்துக் கொண்ட விஷயத்தின் கனத்துக்கு மதிப்பு கொடுத்து, அமுக்கி வாசித்திருக்கிறார். அவரது இந்த ‘புரிந்துகொள்ளல்’ ஒரு இனிமையான ஆச்சர்யம்.
* நூலின் நோக்கத்தை முழுதுமாகப் புரிந்து கொண்டு, பல ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்த ரொம்பவும் மெனக்கிடாமல், அதே சமயம், அறிமுகமான தமிழ்ச் சொற்களுக்கு, ஆங்கில வார்த்தைகளைப் போட்டு படுத்தி எடுக்காமல், நன்றாக பேலன்ஸ் செய்திருப்பது.
நான் மார்க்கெட்டிங் பற்றி பாடபுத்தகங்களில் படித்தவனில்லை. trial & error மூலம் கற்றுக் கொண்டு, பயன் பெறுபவன். முழுமையாக, எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறாரா, கருத்துப்பிழைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.ஒரு வேளை மீனாக்ஸ் போன்றவர்கள், இன்னும் விளக்கமாக எழுதலாம். சோதனை முறையில் நான் தெரிந்து கொண்ட விஷயங்களை, பரிச்சயமான மொழியில், இணக்கமான நடையில், ஒரு விற்பன்னர் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளும் போது கிடைக்கும் நிம்மதி அலாதியானது. இந்நூல் அதை அளிக்கிறது.
இனியாவது, இப்படிப்பட்ட உருப்படியான புஸ்தகங்களைப் பிரசுரம் செய்யும் போது, தெலுங்கு டப்பிங் பட ஸ்டைலில், தலைப்பு வைக்க வேண்டாம் என்று கிழக்கிடம் கேட்டுக் கொள்கிறேன் இல்லாவிட்டால் நான் வடக்கிருக்க வேண்டியிருக்கும்.
Be the first to rate this book.