கடந்த 2001 ஆம் ஆண்டு, தென்தமிழகத்துக் கிராமம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறை நடத்திய மிருகத்தனமானத் தாக்குதலை ஆவணப்படுத்தியுள்ள இந்நாவல், களப்பணி அனுபவத்தில் எழுதப்பட்டதொரு வாக்குமூலமாகும். கற்பனைக்கும் எட்டாத வகையில் இரவோடு இரவாகச் சூறையாடப்பட்ட ஒரு தலித் குடியிருப்பின் வரைபடத்தை இலக்கியப்படுத்தி, திகிலூட்டும் வாசிப்பை இந்நாவல் சாத்தியமாக்கியிருக்கிறது.
அநீதியான சமூகத்தின் வெளிப்பாடே வன்கொடுமைகள் என்பதை உணர்த்தும் இந்நாவல் தமிழகச் சூழலில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகள் பற்றி பொதுச்சமூகம் கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள், அது வெளிப்படுத்தும் உரையாடல்கள், அரசியல் தளத்தில் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றைக் கலப்படமேதுமற்ற காட்சிகளுடன் விவரிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து, பணித்தளத்தில் ஒரு கத்தோலிக்கக் கிறித்தவ அருட்பணியாளர் நடத்திய களப்போராட்ட அனுபவங்களினூடாக இன்று வரையிலும் புரிபடாமல் நீடிக்கும் கிறித்தவ ஆன்மீகக் கருத்தாக்கத்துடன் தர்க்கமிடுகிறது; களத்தில் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க அருட்பணியாளர்களுக்குப் பாதை காட்டுகிறது.
நவீன தமிழ் இலக்கிய ஆளுமைகளுள் ஒருவராக விளங்கும் முதுபெரும் எழுத்தாளர் மாற்கு எழுதிய இந்நாவல், அவரது களப்பணியின் உந்துணர்வினால் உருவான படைப்பாகும். மேலும், மக்களோடு வாழ்ந்து, மக்களின் வாழ்வின் மூலம் சேகரித்த அனுபவங்களை இலக்கியப்படுத்தும் எழுத்தாளர் மாற்கு, தனது வலிநிறைந்த அனுபவங்களுடன் தமிழுக்குச் சேகரித்துத் தந்த வரலாற்று ஆவணம் இந்நாவல் எனக் குறிப்பிடுவது மிகையாகாது.
- எழுத்தாளர் யாக்கன்
Be the first to rate this book.