லியானார்டோ டாவின்ஸியின் உலகப் புகழ்பெற்ற மோனா லிஸா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. மறுமலர்ச்சி ஓவியர்கள் எல்லோரிடமும் டாவின்சியின் தாக்கம் இருக்கிறது.
மோனா லிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்களின் மொத்த உருவமாக, லிசா கெரார்டினிஎனும்இத்தாலிநாட்டுப்பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்டது. லிசாவின் கணவன் ஃப்ரேன்செஸ்கோ பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த பின்பும், ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்த லிசா ஆடம்பர வாழ்க்கையை நாடவில்லை. குடும்பத்தை அரவணைத்து 5 குழந்தைகளை வளர்த்தெடுத்தவளின் தியாகத்திற்கு பரிசாகத் தீட்டப்பட்ட அந்த உருவப்படம், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உள்ளார்ந்த மனநிறைவைப் புன்சிரிப்பாலும், படாடோபமற்ற ஆடைகள் மூலமாகவும் வெளிக்காட்டும் உயிரோட்டமான முகப்பொலிவுடையது.
மோனா லிசாவை மாதிரியாக வைத்துக்கொண்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் 2000த்தைத் தாண்டிய விளம்பரப்படங்கள் தயாரிக்கப் பட்டாகிவிட்டன. ஆனால் யாரும் அவள் அடையாளத்தின் குறியீட்டை அதற்கான காலம் கடந்தும் மாற்ற முற்படவில்லை.
அந்த மரபை முதல் முதலில் உடைக்கத் துணிந்தவர் ஆண்டி வார்ஹால் எனும் அமெரிக்க ஓவியர். பாப் இசைக் கலாச்சாரத்தின் போப்பாக அவர் திகழ்ந்தார். அவரை அந்த உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்த ஓவியத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த மாதிரி நோர்மா ஜீன் எனும் பெண். அவர் தீட்டிய ஓவியத்தின் பெயர் நடிகை மர்லின் மன்றோ. அவளது அகால மரணத்தின் பின் புதைந்துள்ள மர்மங்களைப் பதிவு செய்யும் விதம் அவள் நடித்து வெளிவந்த நயகரா படத்தில் வரும் புகைப்படத்தை பட்டுச் சாளரம் வழி ஓவியமாக்கினார்.
வாழும் காலத்தில் மர்லின்,மோனாவைப்போல் குடும்பம் என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் சிறகடித்துப் பறந்த உல்லாசப் பறவை. வெடித்துச் சிரிப்பவள், தன்நடை, உடை, பாவனையில் காட்டிய கட்டற்ற கவர்ச்சியையும், அதன்பால் ஏற்படும் கவன ஈர்ப்பையும் அணு அணுவாய் அனுபவித்தவள், உலகின் அரியவை அனைத்தையும் ஆனந்தக்கூத்தாடிரசித்தவள், ஆண்வழி சமூகத்தின் அடக்குமுறைகளைத் தன் கால்களின் இடுக்கில்போட்டுப் புதைத்தவள். அதனால்தான் அவளை ஒரு கலாச்சார சின்னமாக நிறுவுவதில் வார்ஹாலால் ஓவியத்தில் அவருக்கிருந்த பாண்டித்தியத்தைச் சரியாக பிரயோகித்து வெற்றியடைய முடிந்தது.
மர்லின் மன்றோவின் தொழில்முறை வாழ்க்கை வண்ணமயமானதாக இருந்தது, தனிப்பட்ட வாழ்க்கையின் மேல் இருள் மேவியிருந்தது. அந்த உயிர் வாங்கிடும் ஓவியத்தின் பின் இருந்த பெண், எப்படி 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியப் போக்குகளை வரையறுக்கும் ஆளுமையாக மாறினாள் என்பதைச் சுவைப்பட சொல்லும் இரத்தினச் சுருக்கமான தொகுப்பே இந்த சரிதை!
Be the first to rate this book.