காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி-க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப் பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது.
1980-களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட கிழக்கு வங்காளப் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான தலித் மக்கள் இந்தியாவுக்குள் - குறிப்பாக மேற்கு வங்காளத்துக்குள் - அகதிகளாக வந்தனர். அவர்களுக்கு ஜோதிபாசு அரசு தங்குவதற்கு இடம் தராமல், சிறைகள் போன்ற அகதிகள் முகாமில் அடைத்து வைத்தது. இப்படி அடைத்து வைக்கப்பட்டவர்கள் மீதும் கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டார்கள். இப்படி கொல்லப்பட்டவர்கள் சுமார் 17 ஆயிரம் பேர் இருக்கும் என்கிறார் நூலாசிரியர். இப்படிப்பட்ட படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் நாமசூத்திரர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள். அந்தச் சமூகத்தின் எழுச்சிக்குப் போராடிய குடும்பத்தில் இருந்து வந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கம் பற்றிய ஆய்வைச் செய்த ராஸ் மாலிக் என்பவர்தான் இந்த நூலின் ஆசிரியர்.
கொல்கத்தாவில் இருந்து சரியாக 75 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் தீவு மரிச்ஜாப்பி. இங்கு வாழும் தலித் மக்களுக்கு நாமசூத்திரர்கள் என்று பெயர். இந்த மக்களுக்காக இயக்கத்தை வழிநடத்திய ஜோகிர்நாத் மண்டல் என்பவர்தான் பாபா சாகேப் அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு அனுப்ப வழிகாட்டியவர். இந்த நாமசூத்திரர்கள், பாகிஸ்தானில் சிறுபான்மையினராகக் காட்டி கைவிடப்பட்டார்கள். அவர்கள் மேற்கு வங்கத்துக்கு வந்தார்கள். 'அவர்களைக் குடியமர்த்த எங்களுக்கு இடமில்லை’ என்று அப்போதைய காங்கிரஸ் முதல்வர் சொன்னபோது, நாமசூத்திரர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி பேசியதாகவும் ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் ஆட்சி மாற்றம் நடந்ததும் நாமசூத்திரர்களை வெளியேற்ற முடிவெடுத்து காவல் துறை மூலமாக அதனை நடைமுறைப் படுத்தியதாகவும் நூலாசிரியர் சொல்கிறார்.
'ஜாலியன் வாலாபாக் படுகொலை ஹன்ட்டர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டது. ஆனால் மரிச்ஜாப்பி படுகொலை தீண்டத்தகாத மக்கள் தவிர அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது. மற்ற படுகொலை நிகழ்வை வெளிப்படுத்தி விளம்பரப்படுத்த சக்தி வாய்ந்த அறிவுஜீவி சமூகம் முன்வருகிறது. ஆனால் தீண்டத்தகாத அகதிகள் விஷயத்தில் எதுவுமே நடக்கவில்லை’ என்று ராஸ் மாலிக் சொல்கிறார். அதுதானே இன்றுவரை நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.
- புத்தகன்
Be the first to rate this book.