மார்கழி பாவியம்: இனம் நிலம் மொழி இது எனது பதினைந்தாவது கவிதை நூல். இரண்டு இலக்க எண்ணிக்கையில் அச்சாகி வெளிவந்து, நட்புவட்டத்திற்கு வெளியே அறிமுகமாகாத சில தொகுப்புகளிலிருந்து நானே தெரிவுசெய்த கைப்பிடியளவு கவிதைகள்.
கடவுள், இசை, கலை, இலக்கியம் யாவும் செயற்கையானவை. உள்ளம் என்னும் இல்பொருண்மையை மனித உடம்புக்கு ஓர் உறுப்பாக்கிப் பொருத்திக்கொள்ளும் முயற்சி.
இலக்கியத்தின் முதன்மையான நான்கு பெரும் பிரிவுகளான கவிதை, கதை, கட்டுரை, நாடகம் இவற்றின் உள்ளடக்கத்தைக் கலைத்து அடுக்கி ஒன்றாய் ஆக்கிப்பார்க்கும் முயற்சியே கவிதை முதலான எனது படைப்புகள்.
ஒரு படைப்பாளரின் தொகுப்பிலிருந்து தேர்ந்த ஆக்கங்கள் என்பவை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுபடும். நானே எனக்கு முதல் வாசகன் என்பதால் இந்நூல் என் வாசிப்பின் தேர்ந்தெடுப்பில் உருவானது. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வாசிப்பில் நான் வெவ்வேறாகக் கலைத்து அடுக்கித் தேர்ந்துத் தொகுக்கப்படலாம். வாசகர் முகங்களே ஒற்றைப் பனுவலுக்குப் பன் முகங்களாகப் பொருந்தி உதிர்கின்றன. இயற்கை ஒருமையானது; செயற்கை, பன்மையானது. என்னைப்போலவே எனது பனுவல்களும் பன்மையின் விளைவு. இயங்கியல் பொருண்மை பன்மையாலானது.
- ரமேஷ் பிரேதன் , புதுச்சேரி
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.