எந்தத் தன்னலமுமின்றி, தன்னால் இயன்ற உதவியை பொருளாகவோ உடலுழைப்பாகவோ தந்து கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இந்த உலகத்தில் ஆங்காங்கே மனிதம் மலர்ந்துகொண்டிருக்கிறது. சக மனிதன் துயரப்படும்போது, நமக்கென்ன என்று நகர்ந்துபோகாத உதவிக் கரங்கள், இன்னும் ஆங்காங்கே நீண்டுகொண்டுதானிருக்கின்றன. இயற்கைப் பேரிடர், விபத்து போன்ற துயரப் பொழுதுகளில் சக மனிதனைக் காக்க வேண்டும் என்று தன்னியல்பாக முன்வந்து நிற்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகள் நமக்கு நிரூபித்துக்காட்டியிருக்கின்றன, காட்டிக்கொண்டு மிருக்கின்றன. சுற்றுச்சூழலைக் காக்க துணை நிற்கும் கரம், நீர்வளத்தைப் பாதுகாக்க நீளும் கரம், விலங்குகளை, பறவைகளைக் காக்க பயணம் செய்யும் கால்கள் என பல தளங்களிலும் தன்னார்வக் களச்செயல்பாட்டாளர்களின் பணிகள், பரந்துபட்டு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட மனிதர்கள் சிலர் ஆனந்த விகடனில் ‘மாரத்தான் மனிதர்கள்' என்ற தொடர் கட்டுரைகளில் வந்தார்கள். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தூர்ந்துபோன கிணறுகளை தூர்வாரி மீட்கும் பெண், அழிந்துவரும் கழுகுகளைக் காக்க காடுகளில் அலையும் மனிதர், அதிகார வர்க்கத்தினரின் ஆக்கிரமிப்புச் செயல்களைத் தடுத்து நிறுத்தப் போராடுபவர், ஆதரவற்றவர்களின் சடலங்களை சகல மரியாதையோடு அடக்கம் செய்யும் அற்புத மனிதர்... இப்படித் தன்னலமின்றி செயலாற்றிக்கொண்டிருக்கும் சமூகச் செயல்பாட்டு மாண்பாளர்களைப் பற்றிக் கூறுகிறது இந்த நூல். இனி அந்த உன்னத மனிதர்களின் உயர்வான சேவைகளைப் படித்தறியலாம்.
Be the first to rate this book.