நாஞ்சில் நாட்டில் பெரும்பாலும் சுடுகாட்டின் காவல் தெய்வம் சுடலை மாடன். சுடலைக்கும் ஆதி சிவனுக்கும் தொடர்பு உண்டு. அது வேறு சுடலை, வேறு சுடலைப் பொடி. வாய்ப்பிருந்தால் மகாகவி பாரதியின் 'ஊழிக் கூத்து' வாசித்துப் பாருங்கள்.
ஆனால் இங்கு பாடுபொருள் எமது சுடலைமாடன். அவனுக்கு மழைக்கும் பனிக்கும் வெயிலுக்கும் காற்றுக்கும் அரண் ஆலமரம். பெரும்பாலும் சுடுகாட்டு மரங்களில் கிளைவெட்டி, தழைவெட்டி வீட்டுக்குக் கொணர்வதில்லை. அத்துடன் பேயும் கூடவரும் என்ற பயம்.
காட்டின் மரங்கள் வெட்டி, பலகை அறுத்து, கதவு, நிலை, சன்னல் விட்டுப் புதுவீடு கட்டுவோர், புதுமனை புகுவிழா நடத்தும் முன்னிரவில், கணபதி ஓமத்துக்கும் முந்தி, தச்சர் - கொத்தனார்கள் சேர்ந்து ஒரு பூஜை செய்வார்கள். அதற்கு 'தச்சுக் கழித்தல்' என்று பெயர். காட்டு மரங்களில் வாழும் ஆவிகள், முனிகள், துர்தேவதைகள் மரத்துடன் சேர்ந்து வந்திருந்தால் அவற்றை விலக்கி நிறுத்துவார்கள். உயிர்ப் பலியும் உண்டு. அல்லது குறைந்த பட்சம் தடியன் காய் கும்பளங்காய் வெட்டி முறித்தல். அதாவது பாவனைப் பலி.
Be the first to rate this book.