மலையகத் தமிழர்களின் இடதுசாரி எழுச்சியை ஒடுக்குவதற்கு இயன்றளவு மலையக தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்புவது நல்லது என்ற நோக்கத்தை இலங்கை அரசு கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்தனர். இந்திய அரசுக்கும் இப்பிரச்சினையில் ஈடுப்பட கீழ்கண்ட காரணங்கள் முக்கியமாக அமைந்தது. தெற்காசிய நாடுகளில் இலங்கை மிக முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டின் ஆதரவும் உறவும் வல்லரசுகளுக்கு தேவைப்படுகின்றது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் சில நாடுகள் அக்கறை காட்டுகின்றது. 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் ஏற்பட்டு உறவுகள் பாதிக்கப்பட்டது. ஆகவே சீனா இலங்கையுடன் நெருக்கமாக உறவுக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை. இச்சூழ்நிலையில் இலங்கை முன் வைத்த ஒப்பந்தங்களை (நாடுக் கடத்தலை) ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 1964 ஆம் ஆண்டு உடன்படிக்கை ஜவஹர்லால் நேரு அவர்கள் எடுத்திருந்த நிலைக்கு மாறான நிலையாக இருந்தது. அன்றைய புறநிலை சூழ்நிலை அழுத்தம் இந்தியா இவ்வாறான தீர்வுக்கு வருவதற்கு காரணம் என்று கூறலாம். இந்தியாவின் பாதுகாப்பு என்ற வாதத்தை முன்நிறுத்தி அயல்நாடுகளுடன் நட்புறவை பேணுவதற்கு கொடுக்கப்படும் விலை ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளைக் காவு கொடுப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் இந்த உடன்படிக்கை அவ்வாறான தன்மையை கொண்டுள்ளது.
Be the first to rate this book.