தற்சார்பு என்னும் சொல் அளவுக்கு அதிகமாக மேலோட்டமாகப் புழங்கிவிட்டதால் பலருக்கு அச்சொல்லின் ஆழம் நீர்த்துப்போய்விட்டது.
ஆசான் ம.செந்தமிழன் செம்மை வழியாக முன்னெடுக்கும் ஒவ்வொரு செயல்பாடும் சார்புத்தன்மையை அகற்றுவதையே அடித்தளமாகக் கொண்டிருக்கும்.
மருத்துவத்தில் கூட “பிற மருத்துவ முறைகளையும் மருத்துவர்களையும் சார்ந்திருப்பதற்கு மாற்றாக என்னைச் சார்ந்திருக்குமாறு உங்களை மாற்றுவதல்ல எமது நோக்கம். உங்கள் உடலை நீங்களே புரிந்துகொண்டு செயல்படுங்கள். ஒரு சில முறைகளுக்கு மேல் உடல்நல வழிகாட்டலுக்காக என்னிடம் தொடர்ந்து வராதீர்கள்.” என ஆசான் எப்பொழுதும் வலியுறுத்திக்கொண்டு இருப்பார். தம்மைச் சார்ந்திருக்காமல், உடலைப் புரிந்துகொள்ளத் தேவையான அனைத்தையும் உரைகள், வகுப்பு மற்றும் நூல்களின் வழியே தொடர்ந்து சமூகத்துக்குக் கற்பித்து வருகிறார். ஒவ்வொருவரும் தன்னுடைய நலனையும் தமக்கு நெருக்கமானோர் நலனையும் பேணுவதற்கு என்ன தேவையோ அவற்றை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
ஆசான் மரபுக்கட்டுமானம் தொடர்பான தமது செயல்பாடுகளைத் தொடங்கிய காலத்திலேயே,’கட்டுமானத் துறை என்பது பணப் புழக்கமும், பேராசையும், குற்றங்களும் நிறைந்த களம். எந்தத் துறையிலும் குற்றங்களுக்கும் சிக்கல்களுக்கும் சார்புத்தன்மையே அடிப்படைக் காரணமாக இருக்கும். இச்சார்புத் தன்மையை அழித்தொழிக்காமல் இரும்புக்கம்பிகளுக்கும், சிமெண்டுக்கும் மாற்றாக மரத்தையும் மண்ணையும் போட்டுக் கட்டுவதல்ல மரபுக் கட்டுமானம்’ எனத் தெள்ளத் தெளிவாக தமது நிலைப்பாட்டை நிறுவினார்.
எவரேனும் ”என்னிடம் பணம் இருக்கிறது. நீங்களே வந்து வீடு கட்டிக்கொடுங்கள்” என அழைத்தால் “நீங்கள்தான் உங்கள் வீட்டைக் கட்ட வேண்டும். என்ன தேவையோ அவற்றை வேண்டுமானால் நான் கற்றுத் தருகிறேன்” என உறுதியாக மறுத்துவிடுவார். அதே விதமாக, மரபுக் கட்டுமான வகுப்புகளை நடத்தியும், நூல்களைப் பதிப்பித்தும், அனுபவமாகக் கற்றுக்கொள்ளும் விருப்பத்தில் உள்ளோருக்கு செம்மைவனத்திலோ அல்லது பிற செம்மை சமூகத்தினரின் இடங்களிலோ நடக்கும் கட்டுமானங்களில் பங்குகொள்ள வாய்ப்பளித்தும் வழிநடத்தியும் மரபுக்கட்டுமானக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் கற்பித்து வருகிறார்.
அவ்வகையில் தற்பொழுது ஆசான் ம.செந்தமிழனின் “மரபுக் கட்டடக் கலை கையேடு (செயல் வழிபாட்டு நூல்)” வெளிவருகிறது. இக்கையேடு, ஆசான் இதற்கு முன்பு நடத்திய மரபுக்கட்டுமான வகுப்புகளின் பாடங்களுடன், நூலின் வடிவத்துக்குத் தேவையான சில கூடுதல் நடைமுறை வழிகாட்டல்கள் இணைந்த ஒரு தொகுப்பு.
மரபுக்கட்டடக் கலை தொடர்பாக இரு நூல்கள் இதற்கு முன்பு வெளிவந்துள்ளன. அவை கொள்கை விளக்கங்களை முதன்மையாகக் கொண்டவை. ஆனால், ’கையேடு’ நடைமுறைகளை முதன்மையாகக் கொண்டுள்ளது. கட்டுமானத்துக்கான இலக்கணங்களையும், கொள்கைகளையும் உள்ளீடாக அமைத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் செயல்வழிபாட்டு முறைகளை முன்வைக்கும் இந்நூல் ’தமக்கான வீட்டை யாரையும் சார்ந்திராமல் தாமே கட்டிக்கொள்ளவேண்டும்’ என்னும் விருப்பம் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒரு மிகச்சிறப்பான வழிகாட்டலாக அமைந்துள்ளது.
இக்கையேட்டில் ‘கட்டுமானம் எழுப்பும் முன்பு அதைப் பற்றிய நம் அணுகுமுறையும் பார்வையும் என்னவாக இருக்க வேண்டும்’ என்பதில் தொடங்கி நிலத்தின் இயல்பை அறிந்துகொள்ளும் வழிமுறைகள், மண்ணின் குணங்களைக் கண்டறியும் சோதனைகள், மண் சாந்துக்குப் பொருத்தமான மண்ணை எப்படித் தேர்ந்தெடுப்பது, நிலத்தில் நீரின் ஓட்டத்தை அறிந்து அதன் பொருட்டு அடித்தளம் அமைக்கும் வழி முறைகள் என கட்டுமானத்தின் தொடக்கத்துக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் எளிமையாகக் கற்றுத்தருகிறார்.
வடிவமைப்பில் அளவைகளுக்கான இலக்கணம், வடிவமைக்கும் முறைகள், வீட்டின் உறுப்புகள், அவற்றின் மூலப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள், மற்றும் நிறைவுப்பணிகளான பூச்சுகள் வரை ஒவ்வொரு படிநிலைக்குமான நடைமுறைகளை விளக்குகிறது இக்கையேடு.
Be the first to rate this book.