மரபீனியப் பொறியியல் முறையில் இயற் கைக்கு முரணான வகையில் மரபீனி மாற்றப்பட்ட உயிரினங்கள் எனப்படுகின்றன. இவ்வகையில் உருவாக்கப்பட்ட பயிர் வகைகள், மரபீனி மாற்றப் பட்ட பயிர்கள் எனப்படுகின்றன. இரா.அருள் கூறிய மேலே குறிப்பிட்ட விளக்கத்தை ஒரு அத்தியாயத்தில் விளக்கும் இந்நூலின் ஆசிரியர், தன் நூலையே இத்தகைய பயிர்களைப் பயன்படுத்தி தங்களுடைய உயிர்களை நீத்த உழவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்தி, பச்சைப் புரட்சிகளின் எதிர்மறை விளைவுகளை விளக்க முற்படுகிறார்.
உலகமயமாக்கலினால் விவசாயத்தில் ஏற்படும் பலவிதமான அச்சுறுத்தல்களை வெவ்வேறு விவசாய அறிவியல் வல்லுனர்கள், வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதி வெளியிட்டுள்ள கட்டுரைகளை தனது கருத்திற்கு சான்றாக இந்நூலில் வெளியிட்டுள்ளார் ஆசிரியர். கட்டுக் கதைகள் என்ற அத்தியாயம் திருக்குறளுடன் துவங்கி பச்சைப் புரட்சியினால் ஒருவித நன்மையும் இல்லை என்பதையும், இதற்காக பன்னாட்டு நிறுவனங்களும், அரசாங்கமும் வெளியிடும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும் விளக்குகிறது. பி.டி., காட்டன் எனப்படும், மரபீனி மாற்றப்பட்ட விவசாய முறையை பல எடுத்துக் காட்டுகளுடன் வன்மையாக எதிர்க்கிறார்.
பச்சைப் புரட்சி என்பது பசுமைப் புரட்சி அல்ல என்பதையும் விளக்குகிறார்.பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களை, "உங்கள் கேள்விகளும் எங்கள் பதில்களும் உண்மையும் கட்டுக் கதையும்' என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் மாற்றங்கள் எல்லா துறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் இக்காலக்கட்டத்தில் இந்நூல் முழுவதும் வேளாண்மையில் இத்தகைய தாக்கங்கள், எதிர் மறை விளைவுகளையே உண்டாக்கும் என்று ஒரு தலைபட்சமாக விளக்க முற்படுவது சற்று அதிகம் என்று தோன்றுகிறது. இருப்பினும் இயற்கை உரங்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ள பல்வேறு நாட்டு விவசாய அறிவியல் வல்லுனர்களின் கூற்றுகள் இந்நூலுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது
Be the first to rate this book.