கவிஞர் என்பவர் யார்? கனவுகளை எழுதுகிறவர்களா? யதார்த்தத்தை இலக்கியமாக்குபவர்களா? காலம் காலமாக இந்தக் கேள்வி தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. அவரவர்களுக்கு, அந்தந்த நேரத்தில் எது வசதியாக இருக்கிறதோ, அப்படி வைத்துக் கொள்ளலாம். என்றாலும், நேர்நிரை பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடாக வந்திருக்கும் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதியின் ‘மராமத்து’ கவிதைத் தொகுப்பைப் படித்தால், அவரை நாம் ‘யதார்த்தத்தை இலக்கியமாக்குபவர்’ என்று பிரிவில் வைத்துவிட முடியும்.
தலைப்புக்கு ஏற்றாற்போல, இத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் விவசாயத்தைப் பற்றிப் பேசுகின்றன. விவசாய நிலங்கள் வணிகத் தளங்களாக மாறியதைப் பற்றி விசும்புகின்றன. விவசாயி, பன்னாட்டு நிறுவனங்களின் வாயிற்காப்பாளனாக மாறிய கதைகளைச் சொல்கின்றன. தொகுப்பின் முன்னுரையில் ‘தொடர் தற்கொலைச் செய்திகளைத் தன்னுடைய ஊரிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவன், அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக இக்கவிதைகளைத் தொகுத்திருக்கிறான்’ என்று எழுதும் யுகபாரதி, இந்தக் கவிதைகளை வாசிக்கச் செய்வதன் மூலம் அந்தத் தற்கொலைகளுக்கு நம்மையும் சாட்சியங்களாக்கிவிடுகிறார்.
இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை, வார இதழ்களில் வந்தவை. என்றாலும், இப்போது அவற்றை ஒரு தொகுப்பாகப் படிக்கிறபோது, வேறு பரிமாணத்தைக் காட்டுகின்றன.
Be the first to rate this book.