இந்தியாவை உடைக்க முயலும் சக்திகள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் சக்திகள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அவற்றில் முன்னணியில் இவர்கள் இருப்பார்கள்.
இடது சாரித் தீவிரவாதம் பற்றிய அறிமுகத்தை மிகச் சுருங்கக் கூறி விளங்க வைக்க இந்தப் புத்தகம் முயல்கிறது. வழக்கம் போல பாராவின் துள்ளல் எழுத்து நடையில்.
சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு பின் தங்கிய கிராமத்தின் குடிசை எரிப்பு சம்பவத்தில் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம் தொடங்குகிறது. மொத்தம் 13 கட்டுரைகள். மேற்கு வங்கம், சட்டிஸ்கர், ஆந்திரா என்று வளர்ச்சி குன்றிய மாநிலங்கள் அல்லது வளர்ந்த மாநிலங்களின் பிந்தங்கிய பகுதிகள் மாவோயிஸ்டுகள் என்கிற விஷ செடிகள் வளர்வதற்கான தகவமைப்பைக் கொண்டிருக்கின்றன.
விஷம், அமுதம் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். நான் முதலாவதை என் நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றிப் பிறகு காணலாம்.
இந்தியா பிறந்து சிறு குழந்தையாகத் தவழ்ந்து கொண்டிருந்தபோது அரவணைத்தது ஒரு கம்யூனிச நாடு. அதன் மீது போர் தொடுத்து ஆன்ம பலத்தை நொறுக்கியது இன்னொரு கம்யூனிச நாடு.
ரஷ்யா ஆதரித்த நாடான இந்தியாவை சீன வழி வந்த இந்த ஆயுதப் புரட்சிக் கொழுந்துகள் இந்தியாவிற்கு எதிராக எவ்வழிப் புரட்சிகளை ஏற்படுத்துவார்கள்? நல்லதோ கெட்டதோ, மக்களாட்சி தோன்றி வளர்ந்து வருகிறது. ஆரம்பிக்கிறது கலகம் நிலவுடைமையில். சாரு மஜும்தாரின் கொள்கைகள் அறிமுகமாகின்றன.
சும்மா பேசிக்கொண்டிராமல் அடி, பிடுங்கு, நொறுக்கு என்றால் கேப்டன் பார்க்கிறவனுக்கே உணர்ச்சி வேகம் வரும்போது, பசித்தவனை நில சுவான்தாரர்களுக்கெதிராகத் திருப்பிவிட்டால் என்ன ஆகும்?
முதலாளிகள் ஒழிந்தார்கள். நிலம் பங்கிடப்பட்டது. சாரு ஹீரோ ஆனார். அவருடைய சித்தாந்தத்தை ஏந்தி தமிழகத்திலும் அழித்தொழிப்பு முயற்சி செய்து பார்க்கப்பட்டதை உதாரணத்துடன் விளக்குகிறார் ஆசிரியர். அழித்தொழிப்பு மூலம் புரட்சி ஏற்படும் என்று நம்பிய சாரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்டார். அழித்தொழிப்பு என்கிற பெயரில் தனிமனிதப் பழிவாங்குதல்கள் நடந்து இயக்கத்தைப் பலவீனப்படுத்தின. போதாக்குறைக்கு ஜனநாயகப் பேரரசி இந்திராவின் எமர்ஜென்சி காலத்தில் நடந்த நக்சல் அழித்தொழிப்பில் நிறைய பேர் காணாமல் போனார்கள், சிறையில் வாடினார்கள், சிலர் மக்கள் ஆதரவுடன் புரட்சி என்று பாதை மாறுகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தின் மக்கள் இயக்கம் பற்றிய விளக்கமான கட்டுரைகள் (தெலங்கானா, சந்திரபாபு நாயுடு கொலை முயற்சி.
மேற்கு வங்கம் சற்று முன்னர் மமதா கைக்கு வருவதற்கு முன்னர் இடது சாரிகளின் கோட்டை அல்லவா? ஆனால் அங்கு மாவோயிஸ்டுகள் இயங்கக் காரணம் என்ன? இடதுசாரித் தோழர்களின் பைத்தியக்காரத்தனமான ஆளும் திறமை அன்றி வேறேது? லால்கர், சிங்கூர், நந்திகிராம் கலவரங்களின் உதவி கொண்டு நிலையை விளக்குகிறார் ஆசிரியர்.
மக்கள் ஆதரிக்காமல் இவ்வளவு பெரிய வளர்ச்சி சத்தியமா? சாத்தியமே இல்லை. பெரிய வளர்ச்சி என்றால் எப்படி? இயற்கை வளங்களைப் பாதுகாக்க என்று தாக்குதல்கள், போலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள், ஆயுதக் கொள்ளை, சீனா மற்றும் நேபாளத்துடனான தொடர்பு, ஊகமாக சொல்லப்படும் அவர்களின் பொருளாதார மூலாதாரங்கள் என்று மாவோயிஸ்டுகளின் பிண்ணனியைப் பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம்.
மாபெறும் புரட்சி என்கிற கட்டுரை மிகுந்த வீச்சுள்ள கட்டுரைகளில் ஒன்று. நேபாளப் புரட்சியைப் பற்றி விளக்கிக் கூறுகிறது இது. மன்னரிடமிருந்து பிடுங்கி நேபாள மக்களிடம் ஜனநாயகத்தைக் கொண்டுவருகிறார்கள் என்பதைக் காட்டும் கட்டுரை. பின்வரும் பத்தியை புத்தகத்தில் இருந்து அப்படியே பதித்திருக்கிறேன்.
ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத நேபாள மக்களுக்கு அதை மாவோயிஸ்டுகளே முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்கள் என்பதையும், அறுபதாண்டு கால ஜனநாயக சுதந்திரத்தை அனுபவித்த இந்திய மக்களுக்கு, அதைப் பிடுங்குவதுதான் புரட்சி என்று இங்கே மாவோயிஸ்டுகளால் சொல்லப்படுவதையும் இணைத்து யோசித்தால், இங்கே ஏன் மாவோயிஸ்டுகளின் மக்கள் புரட்சி, உண்மையான புரட்சியாக மலராமல், தீவிரமாக மட்டுமே தேங்கி நிற்கிறது என்பதற்கான காரணம் விளங்கும்.
ஆயினும், பல மாநிலங்களில், பல ஆயிரக் கணக்கான கிராமப்புற மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கான காரணம் என்ன என்பதையும், பல்லாண்டுகளாகப் போராடும் பல மாநில அரசுகளால் அவர்களது செயல்பாடுகளை ஒடுக்க முடியதிருப்பதின் நிஜமான பிண்ணனியையும் ஆராய வேண்டும்.
அது அனைத்திலும் முக்கியமானது
மக்கள் ஆதரவில்லாமல் எந்த ஒரு இயக்கமும் நிலைத்திருக்க முடியாது. ஆனால் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அவர்களது சித்தாந்தங்களைப் புரிந்தா தங்கள் நிலைப்பாடுகளை எடுக்கின்றனர்? அவர்களுக்கு அந்த அளவிற்கு ஏது புரிதல். அவர்களது தேவை தங்கள் வாழ்வமைதியைக் குலைக்காதிருப்பது மட்டுமே.
அவர்களது வாழ்விடத்தைப் பிடுங்கிக்கொள்வது
பிடுங்கிய பின் நஷ்ட ஈடு தர மறுப்பது
தரும் நஷ்ட ஈட்டிலும் அலைக்கழிப்பு – புரையோடியிருக்கும் லஞ்சம்
சாமானியருக்கு எதிரான இத்தகு “அரசாங்கத் தீவிரவாதம்”தான் இடது சாரி தீவிரவாதத்தை வளர்க்கிறது எனலாம்.இதை ஆசிரியர் எளிமையான எடுத்துக்காட்டுகள் மூலம் தெரிவிக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ நமது திராவிட அரசுகள் அந்த நிலைக்கு தமிழர்களை அநத நிலைக்குத் தள்ளாதிருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஓட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், போக்குவரத்து வசதி என்று எதையாவது போட்டு மக்களின் அதிருப்தி எல்லை மீறாதவாறு பார்த்து வருகிறார்கள். ஒரு வகையில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதித்திட்டமும் அந்த வகையே.
சமீபத்திய குகைக்கோயில்களை நோக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகளில் தண்டேவடா மற்றும் இதர மாவோயிஸ்ட் பகுதிகளில் தேசீய நெடுஞ்சாலைகளின் தரத்தைக் காட்சிப் படுத்துகிறார். மாவோயிஸ்டுகள் அடக்குவதில் உள்ள தீவிரம் அந்தந்தப் பகுதிகளின் மக்கள் நலத் திட்டங்களிலும் காட்டப்படவேண்டும்.
மாவோயிஸ்டுகள் மீது பழங்குடிகள் காட்டும் ஆதரவு பயத்தின் காரணமாக ஏற்பட்டது என்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கத்தின் எதிரான உணர்வு என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். சரி எது எப்படியோ ஆகட்டும். பள்ளிக்கூடங்களைத் தகர்ப்பது ஏன்? ரோடு போடக்கூட போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுவது ஏன்? மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் தங்களது இருப்பு காணாமல் போய்விடும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆள்பவர்கள்தான் உணரவேண்டும்.
மீண்டும் வாசிக்கவேண்டும்.
Be the first to rate this book.