தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அரண்.
தங்கள் வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதன்பொருட்டு, தங்கள் காவல் தெய்வங்களான கருப்பனிடமோ ஐயனாரிடமோ மாடசாமியிடமோ பேய்ச்சியிடமோ மனதார வேண்டுதல்வைக்கும் வழக்கம், இன்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் வெட்டரிவாளோடும் வேல் கம்போடும் மிரட்டும் பார்வையில் முரட்டு மீசையுடன் உட்கார்ந்திருக்கும் ஐயனாரைப் பார்த்தவுடன் சிறு அச்சம் எழுந்து அடங்கும். இந்த ஐயனார் அவதாரமல்ல; அவர் ஒரு குலத்தின் முன்னோடியாக இருந்து கதைகளின் வழியே காவல் தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துகொண்டிருப்பவர்.
இப்படி முனியனாகவும் சுடலைமாடனாகவும் கருப்பனாகவும் ராக்காயியாகவும் கிராமப்புற மக்களின் மாறா மரபோடு கலந்திருக்கும் சிறுதெய்வங்கள் பற்றி சக்தி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இனி, காவல் தெய்வங்களின் கதை கேளுங்கள்!
Be the first to rate this book.