உள்ளங்கையளவே உள்ள ஒரு இஸ்லாமிய மக்கள் வாழும் மலைக்கிராமத்தின் இதிகாசக் கதை. புரட்சிக்குப் பிந்தைய கூட்டுப்பண்ணைக் காலத்துக் கதை. கிராமமே ஒரு குடும்பமாக இருக்கிறது. ஒரே மனம் கொண்ட குடும்பம். மக்களின் கூட்டு நனவிலி மண்ணோடு, விவசாயத்துடன் காலம் காலமாகத் தொடர்புடையது. அதன் குரலாக உமர்தாதா இருக்கிறார். கதையின் முடிவில் இதிகாச நாயகனாக பேருருக் கொள்கிறார்.
அவருடைய வாழ்க்கை முதிர்ந்த எருது ஆழமாக உழுவதைப் போன்றது. நிலத்தை, அந்தக் கிராமத்தை, மக்கள் மனதை, கிராம சோவியத் என்ற அமைப்பை, கட்சியின் தவறுகளை, உழுது பண்படுத்திக் கொண்டேயிருக்கிறது. எல்லாருக்காகவும் மகிழ்ச்சியடைகிறார். எல்லாருக்காகவும் துக்கப்படுகிறார். எல்லாருக்காகவும் கோபப்படுகிறார். எல்லாருடைய வாழ்விலும் உமர்தாதா இரண்டறக் கலந்திருக்கிறார்.
நாவலை வாசிப்பது ஒரு தியானம் போல இருந்தது. உமர்தாதா, ஹலூன், அகமது, பரீஹான், பாத்திமாத், நஜாபாத், அஸியாத், ஜமால், அலிபேக், ஹூரிஸாதா, பரீ, ஸைகிது, மஜீது, சாதுல்லா, நூலுல்லா என்று எல்லோரும் அந்தத் தியானத்துக்குள் வந்து சென்றார்கள். ஒரு பெரும் அமைதியும் பேரிரைச்சலும் கேட்டுக் கொண்டேயிருந்தது.
Be the first to rate this book.