சிறுகதைக்குப் பரிமாணங்களைச் சேர்த்தவர்கள், சோதனையாளர்கள் என்று தனித்து எடுத்துச் சொல்லும்போது முதல் எட்டுப் பேர்களைத்தான் கணிக்க முடிகிறது. அவர்களது சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறு ஆகும். இவைதான் மணிக்கொடி களத்தில் சிறுகதைத் துறைக்கு அடித்தளம் போட்டவை என்று திட்டவட்டமாகக் கணிக்க முடிகிறது. இப்படிச் சொல்வதால் மற்றவர்கள் பங்கு இல்லை என்று கருதிவிடக் கூடாது. ஒரு சிறு அளவுக்கு உதவியவை. ஆனால் 'இம்பாக்ட்' என்கிறோமே பாதிப்பு, தாக்கம் விளைவிக்கப்பட்டது இந்த முதல்வர்களால்தான் என்பதுதான் இலக்கிய வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டிய உண்மையாகும்.
இந்தச் சின்ன நூலில் நான் தேவையான போதிய அளவுக்கு கணிப்பு செய்து இருப்பதாகக் கூறத் துணிய மாட்டேன். சிறுகதை இலக்கிய வாசகனுக்கு இது அறிமுக முயற்சி அளவுக்குத்தான் செய்திருக்கிறேன். இந்த எட்டுப் பேர்களின் மொத்தப் படைப்புகளான சுமார் எண்ணூறு சிறுகதைகளையும் மொத்த மதிப்பீடு செய்யும்போதுதான் ஒரு 'அவாந்த கார்டே'க்கார 'எக்ஸ்பெரிமெண்டல்' சாதனைகளின் பூரணமான அல்லது அதிகபட்ச அளவீடு நிறைவேறியது ஆகும். அத்தகைய மதிப்பு நிர்ணயம் செய்ய முன்வர ஒரு இலக்கிய வாசகனைத் தூண்டிவிட இந்தச் சிறு நூல் உதவக்கூடும் என்று நம்புகிறேன்.
- சி.சு. செல்லப்பா
Be the first to rate this book.