அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பனிவெளிகள், லாமா மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயணமாக இந்த நாவல் விரிகிறது. குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் நாவல் தத்துவ விசாரமும் பூடகங்களும் குறியீடுகளும் கொண்ட வலைப்பின்னலைத் தனது ஆழத்தில் கொண்டுள்ளது. பனிபடர்ந்த இமயமலையோடு பௌத்த மடாலயங்களின் பின்னணியில் இவால்ட் ஃப்ளிஸர் நெய்யும் புனைவில் அய்ரோப்பியத் தத்துவத்துடன் இந்தியத் தத்துவ மரபும் பௌத்தத் தாந்திரீகமும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடியிருக்கின்றன. தத்துவத்தைப் பொதிந்துவைத்தும் சுவாரஸ்யமாகக் கதைசொல்ல முடியும் என்பதை மெய்ப்பிக்கும் இந்த நாவல் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டதும் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய நாவலுமாகும்.
‘மந்திரவாதியின் சீடன்’ அடிப்படையில் மிக சுவாரஸ்யமான நாவல். இதில் ஆன்மீகத் தேடல் சாகசப் பயணமாக விரிகிறது. துப்பறியும் நாவலுக்கான வேகத்தோடு மிக ஆழமான கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் பக்கங்கள் துள்ளிக்குதித்தபடி விரைகின்றன. விநோதமான மனிதர்கள், ஞானிகள், வியப்பூட்டும் சடங்குகள் இவற்றோடு இமயத்தின் மடியில் நாவல் அசதாவின் அற்புதமான, சலிப்பேற்படுத்தாத தமிழாக்கத்தில் நகர்ந்து செல்கையில் மயிர்க்கூச்சம் எடுத்து குளிர் சூழ்ந்துகொள்கிறது.
Be the first to rate this book.