வெற்றியாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் நாமும் அதுபோல வெற்றிபெற்று புகழ்பெற வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், வெற்றி என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. வெற்றிக்கு தொடர் முயற்சியும் உழைப்பும் இருக்க வேண்டும். உடலை உறுதியாக வைத்திருக்க எப்படி உடற்பயிற்சி தேவையோ அப்படித்தான் மனதுக்கும் பல செயல்கள், சிந்தனைகள் மூலம் பயிற்சியைக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை வலியுறுத்தி ஆனந்த விகடனில் 'மனசுக்குள் ஒரு ஜிம்' என்ற பெயரில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஒரு துறையில் அது தொடர்பான நமது திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நமக்குத் தொடர்ந்து வெற்றிகள் கிடைக்காது. அந்தத் துறை மீதான ஆர்வமும் குறைந்துவிடும். ஒவ்வொரு விஷயத்திலும் எப்படித் திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை பல வெற்றியாளர்களை உதாரணங்களாகக் காட்டி விளக்கியுள்ளார் நூலாசிரியர். ‘உண்மையான வெற்றி அல்லது சுயமுன்னேற்றம் என்பது நம்மை உயர்த்திக்கொள்வதில்தான் இருக்கிறது. நமது திறமைகளில் ஏதாவது ஒன்றை இம்மியளவேனும் வளர்க்காமல் இருப்பது சுய முன்னேற்றம் ஆகாது. அப்படிக் கிடைக்கும் வெற்றி நிலைக்கவும் செய்யாது' - இதுபோன்ற சுயமுன்னேற்ற ஆலோசனைகளைக் கூறுகிறது இந்த நூல். வெற்றிக்கான வார்த்தைகளை வாசித்து மனதை வலிமைப்படுத்துங்கள்!
Be the first to rate this book.