மானசரோவர் - அசோகமித்திரன் - கசப்பின் ருசி
மருத்துவக் காரணங்களுக்காகவோ, உடல் ஆரோக்கியத்திற்காகவோ வேப்பிலைக் கொழுந்து போன்ற கசப்பான வஸ்துவை சாப்பிட நேருபவர்களைக் கவனித்தால் முதலில் அந்த கசப்பை எண்ணி விகாரமாக முகஞ்சுளிப்பார்கள். நாக்கு அந்த கசப்பை அனுபவிப்பதற்கு முன்பே மனம் அனுபவித்து அதை நிராகரிக்கத் துடிக்கும். ஆனால் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மென்று தின்ன ஆரம்பித்து பழகினவுடன நாளடைவில் அதே மனம் அந்த கசப்பின் ருசிக்காக ஏங்க ஆரம்பித்து விடும். உடல் மீது விழும் அடிகளினால் வலி தாங்காமல் அலறும் மனம், ஒரு கட்டத்தில் அடுத்த அடியை ஆவலுடன் எதிர்பார்க்கும் இச்சையை நோக்கி நகர்ந்து விடும். அசோகமித்திரனின் எழுத்து இம்மாதிரியான கசப்பின், வன்முறையின் ருசியைக் கொண்டிருக்கிறது. பொதுவாக அசோகமித்திரனின் எழுத்து மென்மையானதுதானே என்கிற கருத்தைக் கொண்டிருப்பவர்கள், அ.மி.யின் மானசரோவர் புதினத்தை வாசிக்க நேர்ந்தால் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரலாம். அந்தளவிற்கு ஒரே அமர்வில் வாசித்து முடிக்க முடியாத மனஉளைச்சலை தந்தது மானசரோவர். அப்படி எதற்கு வாசித்து தொலைய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்தப் பத்தியை முதலிலிருந்து மீண்டும் வாசிக்கவும்.
அ.மியின் 'கரைந்த நிழல்கள்' சினிமா உலகின், திரைக்குப் பின் இயங்கும் உலகத்தை பருந்துப் பார்வையில் சித்தரித்தது என்றால், மானசரோவர் ஒரு நடிகன் மற்றும் ஒரு கதாசிரியரின் அக உலகை, விநோதமான உறவை மிக நெருக்கமாக முன்வைக்கிறது. வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் இந்தி நடிகன் சத்யன்குமார், தமிழகத் திரையில் சொற்ப ஊதியத்திற்கு மல்லுக்கட்டும் கதாசிரியன் கோபாலனுக்கு 'கூஜா தூக்கியாவது' பணிபுரிய விரும்புகிறான். இருவரின் பார்வையில் மாறி மாறிப் பயணம் செய்யும் புதினம், சுய விசாரணைகளின் மூலம் அவரவர்களின் அந்தரங்கங்களை ஆழமாக வாசகன் முன் வைக்கிறது. முள்கீரிடம் அணிந்திருக்கும் பிரபலங்களின் இருப்பியல் பிரச்சினைகளை சத்யன்குமாரின் பாத்திரம் அசலாக சித்தரிக்கிறது. ஆயிரம் நபர்களின் நடுவிலும் தனியனாய் உணரும் அவன், காரணமேயில்லாமல் கோபாலனை பார்த்த கணத்திலிருந்தே விசித்திரமான வசீகரத்தால் ஈர்க்கப்படுகிறான். சதய்ஜித்ராய் இயக்கி உத்தம் குமார் மிக அருமையாக நடித்த 'நாயக்' திரைப்படம் அடிக்கடி நினைவில் வந்து போனது.
மறுபுறம் ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கோபாலன், தன் வாழ்வின் அன்றாடச் சிக்கல்களோடும் தத்துவம் சார்ந்த சிந்தனைகளோடும் வாழ்கிறான். சமயங்களில் சத்யன்குமாரின் துரத்தல்கள் அவனுக்கு எரிச்சலாகவே தோன்றுகிறது. அகம் சார்ந்த விசாரணையும் ஆன்மீகம் என்கிற புள்ளியும் இருவரையும் இணைக்கிறது.
இந்தப் புதினம் இருவரின் பார்வையில் மாறி மாறி பயணித்தாலும் தொடர்ச்சியின் இழை எங்கும் அறுபடாமல் இயல்பாய் அமைக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் வணிகத் தொடர்கதைகளின் 'சிறுதிடுக்கிடல்' பாணி கூட பின்பற்றப்பட்டிருக்கிறது. பின்னோக்கு சம்பவங்களில் கூட எவ்வித தருக்கப் பிழைகள் கூட அல்லாத பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கிறது. நடிகை ஜெயசந்திரிகாவின் அம்மா போன்ற சிறுபாத்திரங்களைக் கூட நுட்பமான விவரணைகளுடன் வாசகனுக்கு மிக கச்சிதமாக அறிமுகப்படுகிறார் ஆசிரியர்.
அசோகமித்திரனின் மிக முக்கியமான புதினங்களுள் ஒன்று 'மானசரோவர்'
-சுரேஷ்
தமிழில் திரைப்படத்துறையைப் பின்னணியாகக் கொண்டு வந்த நாவல்களில் சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை" முதன்மையானது. அந்த அளவுக்கு திரைப்பட உலகின் விவரங்களை எடுத்துச் சொல்லாவிட்டாலும், இதே திரைப்படப் பின்னணியில் வந்த மற்றுமொரு நாவல்,
அசோகமித்திரனின் "மானசரோவர்". எண்பதுகளில் ‘சாவி’யில் தொடராக வெளி வந்ததாம் இது. திரையுலகின் கீழ் மட்டத்தில் இருக்கும் ஆனால் ஓரளவு செல்வாக்கு கொண்ட கோபால் என்ற ஸ்கிரிப்ட் ரைட்டருக்கும், சத்யன் குமார் என்ற புகழ் பெற்ற வடநாட்டு நடிகனுக்கும் உள்ள உறவு அல்லது நட்பு அல்லது தொடர்பு ஆகியவைதான் மானசரோவர் நாவலின் முக்கிய அம்சம். 'நத்தானியெல் வெஸ்ட்', 'டாக்டர் ஜிவாகோ' என்று படிக்கும் இருவரையும் அறிவுஜீவிகள் என்று சொல்லலாமாவென்று தெரியவில்லை. (சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில் அருண் கோடர்ட் படிப்பது நினைவுக்கு வருகின்றது)
நாவலை எட்டுப் பாகங்களாகப் பிரித்து, அதில் ஒவ்வொரு பகுதியிலும் கோபாலும், சத்யன் குமாரும் மாறி, மாறி 'தன்மை' (1st person) நிலையிலிருந்து ‘கதைசொல்லி’களாக அமைத்திருப்பது சற்றே வித்தியாசமான பாணி. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் சுமார் 25 பாத்திரங்களுக்கு மேலே வந்து போகின்றார்கள். ஆனாலும் அதில் முக்கியமானவர்கள், கோபால்ஜி என்றழைக்கபடும் கோபால், யூசுப் என்ற சத்யன் குமார், கோபாலின் மனைவி ஜம்பகம், புகையிலைச் சித்தர், ஜெயசந்திரிகா என்ற நடிகை, சியாமளா என்ற துணை நடிகை, கோபாலின் பெண் காமாட்சி, அவரின் பையன் ராஜா, ஆகியோர் மட்டுமே.
பிரிவினைக்கு முன் பெஷாவரிலிருந்து பம்பாய் வந்தவன் நடிகன் சத்யன் குமார். பெற்றோர்களையும் உறவினர்களையும் பிரிந்து வந்தவனுக்கு, பெற்றவர்களிடம் பாசம் காட்டியதேயில்லையே என்ற குற்ற உணர்வு எப்போதும் கொண்ட சத்யன் குமாருக்கு, போட்டிகள் நிறைந்த யதார்த்த உலகம் வெறுப்பளிக்கின்றது. அந்த சமயத்தில் கோபால் ஆதர்ச நண்பனாகத் தெரிகின்றான். மேலுன் தான் மதிக்கும் மெஹர் பாபா போலவும், கோபால் தோற்றமளிப்பதால் அவனை கோபால்ஜி என்றும் மரியாதையுடன் அழைக்கின்றான். கோபாலுக்கு ஒரு சமயம குடும்பத்தில் பெரிதும் இக்கட்டான தருணம் ஏற்படுகின்றது. அதனை இங்கே விரிவாக விவரித்தால் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும், எனபதனால் அவற்றை இங்கே தவிர்கின்றேன்.
கோபால் யாரும் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுகின்றான். அவன் வீட்டை தன்னந்தனியனாகக் காலி செய்யும் கட்டம்,பச்சாதாபத்தினை ஏற்படுத்தும் கட்டமாகும். புகழ்பெற்ற நடிகனுக்கே உண்டான பிஸி ஷெட்யூலிலும், கோபால்ஜியைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கின்றான் சத்யன் குமார். அவனக் கண்டுபிடிக்கவேண்டுமென்று மெனக்கெடுகின்றான். அது எதற்கு எனபதுதான் 'மானசரோவர்' என்ற தலைப்பை நியாயப்படுத்தும் விஷயமாகும்.
இந்த நாவலில் வரும் சத்யன் குமாரும், கோபால்ஜியும் 1ste personல் பேசிக்கொண்டேயிருப்பது என்னவோ, பாலகுமாரன் நாவல்களில் வரும் நாயகர்களைச் சித்திரிப்பது போலத் தோன்றுகின்றது. தொலைக்காட்சி மெகாத் தொடர்கள் போல அனாவசியக் காட்சிகளையும், பாத்திரங்களையும் (ஜவர்ஹர்லால் நேருவின் மரணம் இன்ன பிற) வலிந்து புகுத்தியிருப்பது போல எனக்கு முதலில் தோன்றியது. குறிப்பாக எனக்கு இந்த சித்தர் முதலான பாத்திரங்கள் வேறு எரிச்சலைத் தந்தன. அதுவும் சித்தர்கள் என்றாலே, புகையிலை, கஞ்சா, அபினி கேஸ் போலவும், ஆனால் அவர்களுக்கு மட்டும் உலகில் நடக்கும் சூழ்ச்சுமங்கள் எல்லாம் ஞானக்கண்ணால் தெரியும் என்று பில்டப் கொடுப்பதும். ஆனால் வாசகர்களுக்கு கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் யதார்த்தமாகக் காண்பிக்க வேண்டுமென்றால் இவையனைத்தும் அவசியமென்று அசோகமித்திரன் நினைத்திருக்கக்கூடும்.
சிறந்த படைப்பினை வாசித்தாலோ, கேட்டோலோ, பார்த்தாலோ அது வாசகர்களின் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணி, அவர்களை ஒரிரு நாடகளாகவாவது தூங்க விடாமல் செய்ய வேண்டும். அந்த பாத்திரங்களை வாசகர்கள் வெகு காலத்திற்கு மறக்கக் கூடாது. அந்த வகையில் ‘மானசரோவர்’ படித்து முடித்த வாசகர்களை, வெகு காலம் வரை கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் மறக்க முடியாமல் செய்ததில் அசோகமித்திரன் வெற்றி பெற்றே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஜம்பகம், சியாமளா முதலானோர், ‘நல்லவர்களா? கெட்டவர்களா?’ என்ற கேள்விக்கும் விடை கிடைக்காது என்ற காரணத்தால் அவர்களையும் கட்டாயம் மறக்க மாட்டார்கள்.
- சிமுலேஷன்
Be the first to rate this book.