சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் ‘மனம் மலரட்டும்’ என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதுவது குறித்த அறிவிப்பு விகடனில் வெளியானதுமே, வாசகர்கள் அதை வரவேற்று மனம் குளிர்ந்து கடிதங்கள் எழுதினார்கள். கட்டுரை வெளிவரத் துவங்கியதும் ஒவ்வொரு வாரமும் வாசகர்களிடமிருந்து எங்களுக்கு வந்த கடிதங்களும் என்னை உற்சாகப்படுத்தியது உண்மை. அரிய வேதாந்தக் கருத்துகளை ஒவ்வொருவருக்கும் புரியும் வகையில், எளிமையாக எடுத்துரைப்பதில், தனிச்சிறப்புப் பெற்றவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. ‘மனம் மலரட்டும்’ கட்டுரைத் தொடரில் இது பிரத்தியேகமாகப் பிரதிபலித்தது. வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் நல்லது கெட்டதுகளையும் இன்ப துன்பங்களையும் கடவுள் தரும் பிரசாதமாக ஏற்க நமது மனம் பக்குவப்பட்டுவிட்டாலே, பிரச்னைகள் காணாமல் போய்விடும் என்பதை இந்தத் தொடரில் அருமையாக வலியுறுத்தி விளக்கினார் சுவாமி தயானந்த சரஸ்வதி. வாசகர்களின் தனிப்பட்ட கேள்விகளுக்கு சுவாமிஜி அளித்த விளக்கங்கள் இந்தத் தொடருக்கு மகுடமாக அமைந்தன. தனது குருகுலத்தில் வகுப்புகள், வெவ்வேறு ஊர்களில் உரைகள் என்ற தன் தொடர்பணிகளுக்கு இடையே வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதிக்கொடுத்த சுவாமிஜிக்கு என் ஸ்பெஷல் நன்றி. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் விவரிக்க இயலாத மன அழுத்தத்துக்கும் தீர்க்க முடியாத சிக்கல்களுக்கும் உள்ளாகியிருக்கும் பலருக்கும் ‘மனம் மலரட்டும்’ கட்டுரைகள் நன்மருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. விகடனில் வெளியான சுவாமி தயானந்த சரஸ்வதியின் தொடர் கட்டுரைகளை இப்போது விகடன் பிரசுரமாக வெளியிடுவதில் பெருமையும் பெருமிதமும் சொள்கிறேன்.
Be the first to rate this book.