மாமிசம் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே அரசியல் கதைகள்தான். அரசியல் பண்பாட்டு கதைகள். அரசியலைப் பேசாத அரசியல் கதைகள். கோஷமில்லை. ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு, கொடிப் பிடித்தல், வறட்சியான தத்துவங்களின் முழக்கமில்லை. ஆனாலும் இவை முழுமைபெற்ற ஒப்பீடற்ற அரசியல் கதைகளாக இருக்கின்றன. பசியால் செத்தவர்களுடைய அரசியல், அகதியாக்கப்பட்டவர்களுடைய, சந்தேகத்தால் கடத்தப்பட்டவர்களுடைய, சர்வாதிகாரத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் கொல்லப் பட்டவர்களுடைய கதைகள்.
இக்கதைகளில் வருபவர்கள் முன்மாதிரிகளோ, தியாகிகளோ அல்ல. சராசரி மனிதர்கள். இம்மனிதர் களின் அதிகபட்ச ஆசையும், அதிகபட்ச தேவையும், சோறும் உயிரோடிருப்பதும்தான். இரண்டுமே சாத்தியமில்லாமல் இருக்கிறது. சர்வதேச சமூகத்தை அறிவதற்கு இக்கதைகள் ஒளிச்சுடராக இருக்கின்றன. சமூக வாழ்வைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த கருவி இலக்கியப்படைப்புகள்தான். ஒரு வரலாற்று ஆசிரியன், சமூகவியலாளன் செய்ய முடியாததை இலக்கியப் படைப்புகளால் செய்ய முடியும் என்பதை நுண்ணுணர்வுள்ள வாசகன் அறிவான். இக்கதைகளைப் படித்த பிறகு முதலில் தோன்றுவது தமிழில் தற்போது எழுதப்படுவது கதை அல்ல; கதை போன்ற ஒன்று என்பதுதான்.
– இமையம்.
Be the first to rate this book.