இருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சுற்றிலும் சூழ்ச்சிச் சுற்றங்கள். அவர்களுக்கு அடிபணியும் அலுவலர்கள். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யப் போதுமான அறிவைத் தேடிக்கொண்டு, சூழ்ச்சிகளைச் செவ்வனே முறியடித்தார். வேட்டையாடுவதிலும் வீர விளையாட்டிலும் மட்டுமே விருப்பமுடையவர் போல வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும் திறமையாக நாட்டை ஆண்டார். அக்பர். சிறந்த ஓவியர், எழுத்தாளர், போர்வீரர், இசைப் பிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைப் பெற்றிருந்தவர். ஆட்சி அதிகாரம் தன் கைக்கு வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடவில்லை. மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவது எப்படி என்ற சிந்தையில்தான் அவர் கவனம் இருந்தது. அடக்குமுறையாலும் அக்கிரமத்தாலும் இதுவரை மூதாதையர் வளைத்துப்போட்ட இந்தப் பேரரசில் மக்களின் ஆதரவைப் பெறுவது ஒன்றே தலையாய செயல் என்று புரிந்துகொண்டார். இஸ்லாமியர் அல்லாதாரைப் புரிந்துகொள்ளவும் சமயச் சச்சரவு இன்றி தன் பேரரசை நடத்திச் செல்லவும் முற்பட்டார். அவரவர் மதத்தின் நற் கருத்துகளை எல்லோரும் பரிமாறிக்கொள்வதையே விரும்பினார். அக்பரைத் தங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியும் சிலருக்கு இருந்தது. ஆனால், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய அனைத்து மத அர்த்தங்களையும் உணர்ந்தவர் அக்பர். தானாகவே தீன் இலாகி என்ற ஒரு மதத்தையும் தோற்றுவித்தார். அவர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் அக்பரைக் குறைகூறியும் இருக்கிறார்கள். அக்பர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட வாரிசு நெருக்கடிகள், வளர்ப்புத் தாயால் விளைந்த கொடூரங்கள் ஆகிய நெருப்பாற்றில் அவர் வெற்றிகரமாக நீந்திக் கரையேறி ஆட்சி செய்தது, பதேப்பூர் சிக்ரி என்ற தலைநகரை உருவாக்கியது ஆகியவற்றை நூல் ஆசிரியர் விறுவிறுப்புடன் விளக்குகிறார். மாமன்னரின் அக்பரின் வியக்க வைக்கும், சுவாரசியமான வரலாற்றைப் படியுங்கள்!
Be the first to rate this book.