சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாகப் பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைளாகவும் இருமுகம்கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள். அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது.
- ஜெயமோகன்
Be the first to rate this book.