மகாத்மா காந்தி காவியம் என்பது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை காவிய நடையில் எழுதப்பட்ட நூலாகும். இதை டி. கே. இராமாநுசக் கவிராயர் என்பவர் பத்து காண்டங்களாகப் பகுத்து எழுதியுள்ளார். அவற்றில் இளம்பருவக் காண்டம், நேதளக் காண்டம் ஆகிய இரண்டும் முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இளம் பருவக் காண்டத்தில் காந்தியின் பிறப்பு, கல்வி, திருமணம், வெளிநாட்டுப்பயணம், தொழில் போன்றவை இடம் பெற்றுள்ளன. இவற்றின் ஊடாக காப்பிய மரபுப்படி கடவுள் வாழ்த்து, ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், நகர் சிறப்புப் படலம், போன்றவற்றைப் புகுத்தி காப்பியத் தகுதியை ஏற்படுத்தியுள்ளார்.
காந்தி தான் கொண்ட தொழிலைக் கைவிட்டு அரசியலில் நுழைந்த செய்திகளை நேதளக் காண்டம் எடுத்தியம்புகிறது. நேதளக் காண்டத்தில் முரண்படு படலம், மந்திரப் படலம், சத்திய வெற்றிப் படலம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
கடவுள் வாழ்த்துப் பகுதியில் ராமர், கிருஷ்ணர், திரிமூர்த்தி, ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர், ஸ்ரீ ஆஞ்சநேயர், சரஸ்வதி, தமிழ்த்தாய், பாரத அன்னை போன்றோரை வணங்கி இக்காவியத்தைத் துவக்கியுள்ளார் என்பதை இக்காவிய வழி அறியமுடிகிறது. ஆற்றுப்படலத்தில் மேக வருணனை, அருவி, ஆறு வருணனைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவியற் படலத்தில் ஐந்திணை மக்களின் இயல்புகள் பேசப்படுகின்றன. நகரப்படலத்தில் “சுதமை நகருக்கு இவ்வுலகும் எவ்வுலகும் ஈடாகாது”
என்பதை வலியுறுத்தும் வகையில் நகரச்சிறப்புப்பற்றிய வர்ணனைகள் இடம் பெறுகின்றன. உற்பவப் படலத்தில் காந்தியின் பிறப்பு, மோகன்தாசு எனப்பொருள்படுதல், போன்றவை இடம்பெற்று முன்னிகழ்படலத்தில் கஸ்தூரிபாய், தோற்றம், கஸ்தூரிபாய் மேன்மை, கஸ்தூரிபாயின் மனோபாவம், காந்திஜியின் மனோபாவம், புத்லிபாய் பெண்பார்க்க வருதல், திருமண நிச்சயம், போன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. திருமணப்படலத்தில் கஸ்தூரிபாய்க்கும் காந்திக்கும் நடக்கும் திருமணத்தைப் பற்றியச் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. மலினந்தீர்பபடலத்தில் காந்தியின் இரக்ககுணம், காந்தியின் தந்தை இறப்பு, போன்றச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. பணி படலத்தில் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் பற்றியச்செய்திகள் இடம் பெற்றுள்ளன.
இடம் தீர்ந்தப்படலத்தில் இலண்டனில் காந்தி கல்விபயில்வது, தேர்ச்சி பெறுவது அதுமட்டுமல்லாமல் காந்தி கொண்ட கொள்கைகளான மது, மாமிசம் தொடாமை, மாதில் மயங்காமை, உண்மை பேசுதல், சைவ உணவு உட்கொள்ளுதல் போன்றவைகள் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் விதம் விவரிக்கப்பட்டுள்ளது. தன்னாடு மீட்சிப் படலத்தில் பாரத நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருப்பதைக் கண்ட காந்தி பாரத நாட்டின் அடிமைத் தளையை உடைத்தெறிய வீறு கொண்டு எழுகின்றச் செய்திகளை இயம்புகிறது.
இளம் பருவக் காண்டம் முடிந்து, நேதளக் காண்டம் தொடங்குகிறது. காந்தி தான் கொண்ட தொழிலைக் கைவிட்டு அரசியலில் நுழைந்த செய்திகளை நேதளக் காண்டம் எடுத்தியம்புகிறது. நேதளக் காண்டத்தில் முரண்படு படலம், மந்திரப் படலம், சத்திய வெற்றிப் படலம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
நேதளத்தில் அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்குகிறார் காந்தி, நிற வெறியால் ஏற்பட்ட அநீதியைக் களைய வேண்டும் என்று எண்ணி போராட்டத்தில் களம் இறங்குதல் அதனால் அவர் அடைந்த துன்பங்களை ‘முரண்படு படலமும்’ மந்திரப் படலமும் எடுத்துக் கூறுகின்றன. ‘சத்திய வெற்றிப் படலத்தில்’ மகாத்மாவின் கொற்றம் நிலைநாட்டப்படுகிறது.
Be the first to rate this book.