பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் போகும்பொழுதெல்லாம், பாரதியார் கையில் தேங்காய், பழம் கொண்டு போவார். இவை சுவாமிக்காக அல்ல: வெளியே கட்டியிருக்கும் யானைக்காக. யானையைத் தமது சகோதரனாக பாவித்த பாரதியார், அதற்குத் தேங்காய், பழம் முதலியவற்றைக் கொடுத்து, நல்லுறவு ஸ்தாபித்துக் கொள்ள முயன்றார். பழக்கம் அதிகமாக அதிகமாக, அதன்கிட்டே போய், இவற்றைக் கொடுக்கவும் செய்வார். சில சமயங்களில் துதிக்கையைத் தடவியுங் கொடுப்பார்.
சகோதரத்துவம் முதிர்ந்து வருகிறது என்பது பாரதியாரின் எண்ணம். இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில், ஒருநாள் வழக்கம் போல. 'சகோதரா!' என்று பழங்களை நீட்டினார். யானையோ, வெறிகொண்டு பழங்களோடு பாரதியாரையும் சேர்த்துப் பிடித்து இழுத்துத் தான் இருக்கும் கோட்டத்துக்குள் கொண்டுபோய் விட்டது. பாரதியாரை யானை காலால் மிதித்து விடுமோ என்று பக்கத்திலிருந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பாரதியார் கோட்டத்துக்குள் படுகிடையாகக் கிடந்தார்.
பாரதியாருக்கு நேர்ந்த விபத்தை எப்படியோ. எங்கிருந்தோ கேள்விப்பட்ட குவளைக் கண்ணன், பறந்து வந்ததுபோல் ஓடிவந்து, யானை இருந்த இருப்புக் கிராதிக் கோட்டத்துக்குள் பாய்ந்து, பாரதியாரை எடுத்து நிமிர்த்தி, கிராதிக்கு வெளியே நின்றவர்களிடம் தூக்கிக் கொடுத்தார். பாரதியார் பிழைத்தார். குவளைக்கண்ணனும் கோட்டத்திலிருந்து வெளியே வந்தார். பயம் அறியாத, உயிரைத் துரும்பாக மதித்த வீரனைப் படம்பிடிக்க வேண்டுமானால், அப்பொழுது காட்சி அளித்த குவளைக் கண்ணனைப் படம்பிடித்திருக்க வேண்டும்.
- நூலிலிருந்து...
Be the first to rate this book.