பாரதியார்: மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்கு தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?
காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவலல்கள் என்ன?
மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.
காந்தி: அப்படியானால், இன்றைக்கு தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?
பாரதியார்: முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.
பாரதியார் வெளியே போனதும், "இவர் யார்?" என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்துகொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான், "அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி" என்று சொன்னார்.
அதைக் கேட்டதும், "இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?" என்றார் காந்தி. எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டார்கள்.
Be the first to rate this book.