கதவைத் திற காற்று வரட்டும், அத்தனைக்கும் ஆசைப்படு என சோர்ந்து கிடக்கும் மனம் எனும் வீணையை மீட்ட மந்திரங்கள் நம் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறி அல்லது இயற்கைக்கு ஒவ்வாத லௌகீக வாழ்வில் திளைக்க முற்படும் ஒவ்வொரு மனிதனும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் என்பது உண்மை. மகிழ்ச்சி என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காக மனிதகுலம் ஏங்கிக் கிடக்கிறது. தினந்தோறும் தியானங்கள், வாரந்தோறும் யோகா வகுப்புகள் என மனித மனம் தவம் கிடக்கிறது. ஆனால், மகிழ்ச்சியை கைக்கொள்ள இந்த பகீரதபிரயத்தனங்கள் எல்லாம் தேவையில்லை என்கிறது மகிழ்ச்சி தரும் மந்திரங்கள் கொண்ட இந்த அபூர்வ நூல்.
சிந்தனை செய்யும் மனிதன் சிறப்பாக செயல்படத் தொடங்குவான். சிறப்பாகச் செயல்படுபவன் நிம்மதியாகவும் நீண்டநாள் சந்தோஷ மாகவும் இருப்பான். ஆனால் சந்தோஷமாக இருப்பது எப்படி? உடம்பின் முக்கியமான நோக்கம் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதுதான். வாழும் வரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்காகப் போராடுகிறது உடல். அதனால் உடலைத்தான் முதலில் மதிக்க வேண்டும். இந்த உடம்பு அழிந்துவிடும் என்ற கருத்தும் உண்மையல்ல. இந்த உலகில் எதுவுமே அழிவதில்லை. ஒன்று வேறு ஒன்றாக மாறிவிடும் என்பதை ஆன்மிகமும் விஞ்ஞானமும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதனால் வாழும் வரையிலும் இந்த உடம்பை புனிதமாக போற்றிப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் உள்ள மனிதனால் மட்டும்தான் வெற்றிகளைத் தொடவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்கிறார் நூலாசிரியர்.
இதுபோன்ற சில அற்புத மந்திரங்களையும், அவை செயல்பட்டு வெற்றியடைந்த ரகசிய கதைகளையும் இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். மகிழ்ச்சியில் திளைக்க விரும்பிய உங்கள் கையில் தவழ்கிறது இந்த நூல். இனி வாழ்வெல்லாம் வசந்தமே.
Be the first to rate this book.