வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து, மதுரையிலே தெய்வமாகிறான். மதுரையில் தெய்வமானதால் இவன் மதுரை வீரனாகிறான். சாதாரண மனிதனைப் போலவே மதுரை வீரனுக்கும் காமம், கொள்ளை, கொலை ஆகிய தீய பண்புகள் இருந்துள்ளன. இவனைப் பற்றிய கதையை தற்காலத்தில் பரப்பிய பெருமை திரைப்படத்தையே சாரும்.
எனினும், மதுரை வீரனைக் கதைப் பாடல்களும், வில்லுப் பாடல்களும், கூத்துப் பாடல்களும், கோலாட்டப் பாடல்களும் புகழ்பாடி வருகின்றன. மதுரை வீரன் பற்றிய வரலாற்றையும், வழிபாட்டையும் கூறி, கதைப்பாடலை இணைத்துத் தருகிறது இந்நுால். மதுரை வீரன் கதை திரைப்படமாக்கப்பட்டது பற்றியும், அதில் கதை மாற்றியமைத்துள்ளது பற்றியும் அறியத் துணை செய்கிறது இந்நுால், மதுரை வீரன் படத்தில் நடித்ததால் எம்.ஜி.ஆர்., வாழ்வில் நிகழ்ந்த மாற்றத்தையும் இந்நுால் எடுத்துரைத்துள்ளது.
மதுரை வீரன் கதைப்பாடலானது காசிக் காண்டம், பொம்மிக் காண்டம், திருச்சிக் காண்டம், மதுரைக் காண்டம் என நான்கு காண்டங்களைக் கொண்டுள்ளது. நாட்டுப்புறப் பாடல் என்பதால் அறிய இயலாத சில சொற்களுக்குப் பொருளும் தரப்பட்டுள்ளன. மதுரை வீரனும் சட்டங்களை உடைத்தெறிந்து, மக்களிடம் செல்வாக்குப் பெற்றுத் தெய்வமாகிறான். வீரனைப் பற்றி அறிய விரும்பும் தமிழருக்கு இந்நுால் ஒரு வரப்பிரசாதமாகும்.
Be the first to rate this book.