ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தைப் பற்றி 1980- ஆம் ஆண்டு சோமலெ எழுதிய நூலை காந்தி கன்யாகுருகுலம் வெளியிட்டுள்ளது. அதையே மறு, புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கலாசார, பண்பாட்டு நகரமான மதுரை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உயிர்ப்புள்ள நகராகவும், நாகரிக மனிதர்கள் வாழ்ந்த இடமாகவும், திகழ்ந்துள்ளதை சங்ககாலம் முதல் தற்காலம் வரை கிடைத்த செய்திகளை விசாரித்து நூலாசிரியர் விளக்கியுள்ளார். மதுரையை தமிழ் இலக்கிய மரபு, வரலாற்று மரபு என பல நூலாசிரியர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது, திரைப்படம் பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த மாவட்ட நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம் என பிரித்து விளக்கியுள்ள நூலாசிரியர் பழனிமலை, போகர் எனும் ராஜரிஷியின் வாழ்க்கை குறித்த தகவல்களை வியப்புற வெளிப்படுத்தியுள்ளார். சமயச்சிறப்பு, பழைமைப் பெருமை முதல் தற்கால அமைப்புச் சிறப்பு வரையில் தகவல்கள் நூலில் நிரம்பியுள்ளன. எந்தப் பகுதியில் எந்தப் பிரிவினர் வாழ்ந்தனர், அவர்களது வாழ்வியல் முறைகள், வட்டார மொழி வார்த்தைகள், பொது அர்த்தங்கள் போன்ற தகவல்கள் ருசிகரம்தான். மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சிறப்பையும் அழகுற தெரிவித்துள்ளார், பழைய மதுரை மாவட்டத்தையே நூலாசிரியர் விவரித்திருப்பது படிப்போரை அக்கால கட்டத்துக்கு பின் நினைவுக்கு கொண்டு செல்வதாக உள்ளதையும் மறுக்க முடியாது. தோற்றுவாய், வரலாறு, பழம் பெருமை என பல தலைப்புகளில் மதுரையின் தகவல் தொகுப்பாக விளங்கும் இந்த நூல் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் முழு வரலாற்றையும் விளக்கும் வகையில் அமைந்திருப்பதே தனிச்சிறப்பாகும். தென் மாவட்ட தமிழர்களுக்கு வரப்பிரசாதமாய் அமையும் இந்த நூல்.
Be the first to rate this book.