படிம மொழியை அதிகம் பயன்படுத்தும், பிரச்சாரத்தைக் கூட கலைத்துவமாகச் செய்வதில் தேர்ந்த, சிடுக்கற்ற மொழி வெளிப்பாட்டைக் கொண்ட சில சிக்கலான கருதுகோள்களைக் கூட கைகளிலிருந்து வழுக்கி ஓடும் நாகமெனப் புனைவுகளில் சொல்லிச் செல்லும் கவிஞர் அன்றிலன் கவிதை நூலில் காலம்தான் மையச்சரடாக ஓடுகிறது. அந்தக் காலம்தான் இவரின் கவிதைக்கான கச்சாப்பொருளாகவும் இருக்கிறது. நீங்கள் நினைப்பது போலில்லை. காலம் என்பது பசியின் புனைபெயர்.
ஆகச் சிறந்த கவிஞராக கவிதைவெளியில் பேசப்படுவார் என்பதற்கு இத்தொகுப்பு முதல் கட்டத் தொடக்கம் எனலாம்.
- கவிஞர் அமிர்தம் சூர்யா, தலைமை துணை ஆசிரியர்-கல்கி வார இதழ்.
மாயநதியின் கால்தடமென்பது, யாருக்குப் புலப்படுகிறதோ அவருக்குத்தான் அது நதியின் நீள அகலங்களையும் ஆழத்தையும் அடையாளங்காட்டும்.
பிரதியை மறு வாசிப்பிற்குள் உட்படுத்தும் போது எளிதாகக் கடந்திருந்த வெறும் எண்ணங்கள், அனுபவங்களாக விரிந்து, விலக்கவே இயலாத ஒன்றாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்கிறது இவரது கவிதைகள். மாயங்கள் காட்டுகிற மனிதத்தைக் கொண்டிருக்கின்றன. எந்த மேலை நாட்டுக் கவிதை மேற்கோள்களும் இல்லாமலே இக்கவிதைகள் தாங்களாகவே வாசகர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும். முதல் தொகுப்பில் குறிப்பிட்டுக் கூறும் தொகுப்பாக மாயநதியைக் கொடுத்திருக்கிறார்.
- க.அம்சப்ரியா, தலைவர் - பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
அன்றிலன் தன் கவிதைகளில் பயன்படுத்தும் படிமங்கள் நேர்த்தியானதாகவும் வியந்து ரசிக்கும்படியும் இருக்கின்றன.
"காற்றின் கைகளை வைத்து
உலர்த்திக் கொண்டிருந்தன மரத்தின் இலைகள்"
என்கிற படிமத்தை எழுத ஒரு கவிஞனுக்கு எவ்வளவு ரசனை மனோபாவம் இருக்க வேண்டும். அன்றிலனின் கவிதைகளெங்கும் நிறைந்திருக்கும் படிமங்களும் ரசனையான வரிகளும் தனித் தனிக் கவிதைகளாக மிளிர்கின்றன.
- இரா.பூபாலன்,
செயலாளர் - பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
Be the first to rate this book.