பருவ மழை எப்போது வரும் என்று கேட்ட பிரதமருக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் அரசியலில் சிக்கிய விஞ்ஞானி, தெரியாமல் தீவிரவாதிகளுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நடுத்தரக் குடும்பத்து அவலம், காசிக்குப் போய் சாப்பாட்டை விட்ட பெரியவர், வீட்டுக்குள் வந்த வெளிச்சப் பாட்டின் ஒற்றைச் சிலம்பால் நடந்த பின்விளைவுகள், வெல்லம் போட்ட ரசத்தை ரசிக்கும் புதுக் கணவனும், சங்கீதத்தை ரசிக்கும் மனைவியும், வெளிநாட்டில் மொழி கூட தெரியாமல் வந்து இறங்கும் சிறுவன் அவனுக்கு கலாச்சாரம் பற்றி உபதேசம் செய்யும் கனவான், கணித மேதை ஸ்ரீ நிவாச ராமனுஜனின் கடைசி தினத்தில், காணாமல் போன கணக்கு நோட்டுப் புத்தகம், முதன் முதலில் செய்யப்பட்ட தன்னுடைய மூதாதையரான பெரிய பாடகரின் சங்கீத ஒலிப்பதிவை அரண்மனையில் தேடிக் கண்டுபிடிப்பது என்று பலவித மனிதர்களும், நிகழ்வுகளுமாக இந்தக் கதைகள் விரிகின்றன.
மனிதர்களும் அவர்களின் உறவுகளும் உண்டாக்கும் தருணங்களும் என்றைக்கும் ஆச்சரியம். கதையின் முடிவில் ஆரம்பிக்கும் சொல்லாத கதைகள், அதன் தொடர்ச்சியாக பலவித எண்ணங்கள், அனுபவங்கள் உங்களுக்கும் பூக்கும் என நம்புகிறேன்.
- தருணாதித்தன்
மனதுக்குள் புன்சிரிக்க வைக்கும் கதாபாத்திரங்களும் சுவாரசியமான திருப்பங்களும் தருணாதித்தனின் கதையுலகில் உயிர்த்தெழுந்து வரும். காலம், இடம், கதாபாத்திரங்களை நுணுக்கமாகச் சித்தரித்தால், பாதிக் கதை எழுதிய மாதிரி.
“இந்தப் பதினைந்து கதையும் காத்திரமானவை. சுநாதமானவை. எங்கேயும் சுவரம் திரிந்து போவதில்லை என்பதே தருணாதித்தனின் தேர்ந்த கதையாற்றலுக்குச் சாட்சி. ஒற்றை இருப்பில் வாசித்து முடித்து மனதில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இருப்பவை.”
- எழுத்தாளர் இரா.முருகன்
Be the first to rate this book.