தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையானவை என்ற போதிலும், அலைகளில் தாக்குண்டு சிதறும் பொருட்களின் தன்மையைப் பொருத்து கல்லின் ஆழமும் வீச்சின் வேகமும் உணரப்படும். கல் ஒரு முறைதான் வீசப்படுவது போல கவிதை வெளிப்படுகிறது. ஆனாலும் வாசிக்கும் தோறும் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கிறது. வெவ்வேறு கவிதைகளின் தோற்றுவாயாக மாறுகிறுது.நல்ல கவிதை வாசிப்பவனுக்குள் நுழைந்து ஆழத்தில் உறைந்திருக்கும் வாழ்வை அகழ்ந்தெடுத்து வந்து தரிசனப்படுத்தி திகைக்க வைக்கிறது. அதனால்தான் இது என்னுடைய வாழ்வல்லவா என கொண்டாடுகிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை என்பதால் பொதுவான அனுபவமளிப்பதிலிருந்து கவிதைகள் மேலே செல்கின்றன. ஒவ்வொரு கண்ணாடியும் தனக்கான பிம்பங்களையே அகத்தில் உருவாக்கிக் கொள்கின்றன. வாசித்த கவிதைகள் உருவாக்கிய தாக்கத்தை வாழ்வின் அனுபவங்களுடன் சொல்லிப்பார்க்க முயன்றதின் விளைவே இக்கட்டுரைகள்.
Be the first to rate this book.