இரவுகளில் தான் படங்கள் பார்ப்பது. முன்னர் கேள்விப்படாததாக இருந்தால் படம் முடிந்ததும் இயக்குநர் பெயர் இன்ன பிற தகவல்கள் தெரிந்து கொண்டால் தான் விடியும். அது ஒரு பெண் இயக்குநரின் படமென்றால் அன்றைய நாள் நிச்சயம் உற்சாகத்துக்கானது.
அப்படித் தான் உருவானது மாதர் திரையுலகு. அங்கங்கே பெண் இயக்குநர்கள் இயக்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு உலகம் முழுவதும் தொடர்ந்து இயங்கி வருவது உண்மையில் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. இன்று இயக்குகிற சமகால பெண் இயக்குநர்களின் கணிசமான படங்களைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் மேல் மிகுந்த மதிப்பு ஏற்படக் காரணம் போராடி திரைப்படத் துறைக்கு வந்தவர்கள் என்பது மட்டுமல்ல , அவர்களின் சமூகத்தையும், அரசியலையும் அவ்வளவுத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது குறித்து உரத்த குரலில் பிரச்சாரம் செய்வதேயில்லை. அதையே வலிமையாக காட்டிவிடுகிறார்கள்.
அர்ஜென்டினா நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சனையை ஒரு விடுதியாக உருவகித்து அதில் வந்து தங்குபவர்களை அந்நாட்டின் மக்களாய் நமக்குக் காட்ட முடிகிறது ஒரு இயக்குநரால்.
நாடு விட்டு நாடு எங்களைக் குடிபெயரச் சொல்கிற அரசாங்கம் அந்த இனத்தின் பெண்கள் குறித்து எந்த சிந்தனையுமற்று இருப்பது எதனால் என்கிற கேள்வி எழுப்புகிறார்கள் பலரும்.
எங்கள் குரல்களையும் முகங்களையும் மறைக்கச் சொல்கிறீர்கள் என்பதை நக்கலாகவும் கேட்கத் தெரிந்திருக்கிறது.
‘அப்படியா நாங்கள் பெண்களா..ஓஹோ..ஐயோ இது எனக்குத் தெரியாதே?” என்கிற ரீதியிலான மறுவினையும் உண்டு அவர்களின் படைப்புகளில்.
ஒரு காதலை மிக நேர்மையாக காட்டத் தெரிந்திருக்கிறது. பெண்களின் பலம் மட்டுமல்ல பவீனங்களையும் எடுத்துச் சொல்ல முடிந்திருக்கிறது.
இத்தனைப் படங்களையும் ஒரு வருட காலம் அநேகமாய் ஒவ்வொரு நாளும் பார்த்ததன் விளைவு எனக்கு தனிப்பட்ட விதத்தில் கொடுத்தது பெரும் நம்பிக்கையை. அதையும் விட முக்கியமாக நான் கருதுவது இந்தத் துறையை அவர்கள் தேர்ந்தெடுத்ததால் சந்தித்த போராட்டங்கள் தான்.
‘மாதர் திரையுலகு’ மறுபதிப்பு டிஸ்கவரி வெளியீடாய் வரவிருக்கிறது. மொத்தம் பதினைந்து இயக்குநர்கள். இன்னும் சிலரை சேர்த்திருக்க வேண்டும். எப்படியும் இரண்டாம் பாகத்தில் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்வார்கள் அவர்கள்.
Be the first to rate this book.