பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களானாலும் ஏதோ ஒரு வரியே, ஒரு தருணமே திறப்பினைச் சாத்தியமாக்கும். பல சமயங்களில் சிறிய நூல் ஒன்று மிகப்பெரிய திறப்பினை வழங்கிவிடும். என் மனதில் எப்போதுமே சிறிய நூல்கள் நிகழ்த்தும் பெரிய திறப்புகள் குறித்த வியப்பு நிறைந்திருக்கிறது. ஈரடிக் குறள்கள் நிகழ்த்தும் திறப்புகள் போல, சில சிறிய நூல்கள் மூடுண்ட சிந்தனை வெளியில் திறப்புகளை நிகழ்த்தி வழமையான கருத்தாக்கக் கட்டமைப்புகளை நிர்நிர்மாணம் (deconstruction) செய்துவிடுகின்றன. ஒரு விநாடி மின்னல் நம்மைச் சுற்றியுள்ள வெளியை வெளிப்படுத்திக் காட்டுவது போன்றதுதான் அது. அந்த வகையில் எனக்கு மிக அரிய சிந்தனை அனுபவங்களை வழங்கிய சிறிய நூல்களைச் சிந்தித்துப் பார்ப்பேன். 'சிறிய நூல், அரிய நூல்' என்ற வகைமையில் சில நூல்களைக் குறித்து எழுதலாம் என்று நினைத்தேன். நான்கு சிந்தனைப் புலங்கள், ஒவ்வொன்றிலும் மூன்று சிறிய அரிய நூல்கள், மொத்தம் பன்னிரெண்டு நூல்கள் என்று திட்டமிட்டேன். தத்துவம், பொருளாதாரம், அரசியல், வரலாறு ஆகியவை அந்த துறைகள். இந்த நூல்கள், அவை வழங்கிய திறப்புகள் என் சிந்தனைப் பயண வரைபடத்தின் முக்கியப் புள்ளிகள். அந்தப் புள்ளிகளைத் தொகுத்துத் தருவது வாசகர்கள் அவரவர் சிந்தனைப் பயணத்தினூடாக பயன்தரக் காண்பார்கள் என்ற நோக்கில்தான்.
- முன்னுரையில் ராஜன் குறை
Be the first to rate this book.