சுதந்திரப் போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு, பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு நவீன இந்தியாவைக் கட்டமைத்த சிற்பிகளில் முதன்மையானவர். போராட்டங்களும் தியாகங்களும் சோதனைகளும் சாதனைகளும் நிரம்பிய நேருவின் வாழ்க்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவரும் ‘தேசிய முரசு’ இதழின் ஆசிரியருமான ஆ.கோபண்ணா ஒளிப்பட வரலாறாக எழுதியுள்ளார். Jawaharlal Nehru – An Illustrated Biography என்னும் தலைப்பில் 2018இல் வெளியான நூலை இப்போது தமிழிலும் எழுதி வெளியிட்டுள்ளார் கோபண்ணா.
நேருவின் குடும்பப் பின்னணி, குழந்தைப் பருவம், திருமண வாழ்க்கை, அரசியல் பிரவேசம். சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய காங்கிரஸ் தலைவராக அவரது செயல்பாடுகள், மகாத்மா காந்தியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்பு, சிறை அனுபவம், காந்தி, ஜின்னா, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் போன்ற சமகால ஆளுமைகளுடன் நேருவின் உறவு எனச் சுதந்திரப் போராட்ட காலத்தினூடாகப் பயணித்து நேருவின் இளமைப் பருவத்தை கண்முன் நிறுத்துகிறது இந்த நூல்.
சுதந்திர இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகக் கட்டமைப்பதற்கு நேரு ஆற்றிய மகத்தான பணிகளை இந்நூல் விரிவாக அலசுகிறது. இந்தியப் பிரதமராக 17 ஆண்டுகள் பதவி வகித்த நேரு ஆட்சியின் சாதனைகள், அவர் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்ற விதம், நேருவின் வெளியுறவுக் கொள்கை, சர்வதேசத் தலைவர்களுடனான அவருடைய உறவு ஆகியவையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நேருவின் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட அரிய ஒளிப்படங்களின் தொகுப்பே நேருவின் மகத்தான வாழ்க்கையை உணர்த்திவிடுகிறது.
Be the first to rate this book.