இலக்கிய வகைமையில் மிகுதியாய் எழுதப்பட்டவை கவிதைகள். யாப்பு நீங்கிய வடிவம் பரவலானதும் அவை எழுதிக் குவிப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாம் முப்பது ஆண்டுகளில் அவற்றின் பெருக்கம் தொடங்கியது. வானம்பாடிகளிடம் புதுக்கவிதையாய் இருந்தது தூய இலக்கியத்தாரிடம் நவீன கவிதை ஆயிற்று. ஆனால் பாருங்கள், அன்று முதல் இன்றுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் எவ்வொன்றும் தூய தமிழ்நடையில் எழுதப்படவில்லை. சிறிதும் குற்றவுணர்ச்சியே இல்லாமல் பிறமொழிச் சொற்கலப்போடு யாவும் வெளியிடப்பட்டன. நம்மவர்களின் சொல்லறிவு மட்டத்தை ஆராய்ந்து பாருங்கள். செய்தித்தாள் மொழிநடை. கூறுமுறைகளில் செயற்கை. கட்டுரையோ என்னும்படியான சொற்கட்டுமானம். நீளச்சொற்றொடர்களில் இலக்கணக் குழப்பம். புதுச்சொல்லோ புதுச்சொற்றொடரோ ஆக்கத் தெரியாத நிலை. மொழியின் உயர்ந்த வடிவம்தானே கவிதை ? மொழியானது செம்மையுற்று வாழுமிடம்தானே அது ? நிலைமை தலைகீழாகிவிட்டது. தமிழுணர்ச்சி குன்றிய வெற்றுப் பயிர்கள் எங்கெங்கும் செழித்தாடுகின்றன. நூற்றாண்டுகட்கு முன்பிருந்தது முழுமணிப்பிரவாளம் என்றால் இன்றைய பாப்புனைவு மொழியில் பயில்வது அரைமணிப்பிரவாளம். இந்தக் கண்மூடிப்போக்கிற்கு எதிராக நான் முன்வைக்கும் தமிழ்முயற்சியே இந்நூல். இத்தொகுப்பினைத் தொண்ணூற்றொன்பது விழுக்காடு தூய தமிழ்ச்சொற்களால் ஆக்கியுள்ளேன். மீந்துள்ள ஒரு விழுக்காட்டுச் சொற்கள் தமிழே, வடமொழியே என்னும் இருமொழியுடைமைக்கு வழிகோலுபவை. அவற்றை ஆழ்ந்து ஆராய்ந்து தமிழெனக் கொள்கிறேன். ’காரணம்’ போன்ற சில சொற்களைத் தமிழே என்று என் மொழிநூல்களில் நிறுவியுள்ளேன். முழுவதும் தூய தமிழ்ச்சொற்களால் நிறைந்து வெளியாகும் புதுப்பாத்தொகுப்பாம் இதனைத் தமிழ்கூறு நல்லுலகு மனமுவந்து வரவேற்று மகிழும் என்றே நம்புகிறேன். இஃது தொடக்கம்தான். இவ்வழியில் நடைபோட நூற்றுக்கணக்கானோர் முன்வர வேண்டும்.
Be the first to rate this book.