மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்! காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.
Be the first to rate this book.