முதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர்வத்தில் தன்னைச் சுற்றிய அத்தனை பரபரப்புகளையும் புறந்தள்ளிய அவருடைய தனித்தன்மை, ஒரு கவிதைபோல எனக்குள் படிந்த கணம் அது. அதன்பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து லிங்குசாமியைச் சந்தித்தபோது, அவர் முன்னணி இயக்குநர்; முக்கியத் தயாரிப்பாளர். இவற்றை எல்லாம்விட அரிய அரியணையாக கவிஞர், ஓவியர் என்கிற கம்பீரத்தைச் சுமப்பதிலேயே அவருக்குப் பெருமிதம். சிறு குழந்தைச் சிலிர்ப்போடு அவர் ஓவியம் தீட்டும் அழகைக் கண்டபோது, பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த கவிதை கணம் அப்படியே இப்போதும்!
தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்துகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர். ‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்?’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு! ‘அரிசியைச் சுமந்து வரும் எறும்பு சிரிக்கிற மாதிரியே தெரிகிறது’ என்பதில் புரிகிறது லிங்குசாமியின் குழந்தைத்தன்மை. நதியோடும் இலையாக கவிதைகளில் நம்மைச் சுமந்து செல்லும் லிங்குசாமி, ஓவியங்களில் நதியாகவே மாறி நம்மை நனைக்கிறார். பார்ப்பதா படிப்பதா என்கிற ஆர்வத்தில் இதயமே இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுகிறது. ‘லிங்கூ’ படித்தால் நீங்கள் நனைவீர்கள்... ‘லிங்கூ’ பார்த்தால் நீங்கள் மூழ்குவீர்கள்!
Be the first to rate this book.