இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயத்தில், இயற்கைவழி விவசாயம் மீண்டும் புத்துயிர் பெற்றுவருகிறது. செழிக்கும் நிலங்களெல்லாம் ரசாயன உரங்களால் மண் வளம் கெட்டு விளைச்சல் குறைந்து வந்த நிலையில் இயற்கை விவசாயம் பற்றிய புரிதல் பரவலாகிவருவது வேளாண் மக்களுக்கு ஆறுதல் தருகிறது. பஞ்சகவ்யா கரைசல் போன்ற இயற்கை விவசாயத்துக்கு உதவும் வழிமுறைகளால், விளைநிலங்களில் இன்று பயிர்கள் செழித்து வளர்கின்றன. அந்த வரிசையில் இ.எம் எனப்படும் நுண்ணியிர்களைக் கொண்டு உருவாக்கப்படும் கரைசலும் தற்போது விவசாயத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. துர்நாற்றம் ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் மற்றும் தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழித்து, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் என்பதால் உலகின் பல நாடுகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் பயன்பாட்டுக்கு மாற்றாக இ.எம். கரைசலைப் பயன்படுத்துகிறார்கள். நுண்ணுயிர்களைக்கொண்டு உருவாக்கப்படும் இ.எம் செய்முறை, விவசாயத்தில் பயன்படுத்தி நல்ல விளைச்சலைப் பெறுவது எப்படி, இ.எம்மை வேறு எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை விளக்கி பசுமை விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்போடு புதிய தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல். இயற்கை விவசாயம் வளர வலியுறுத்தும் இந்த நூல் விவசாயிகளுக்குப் பெரும் பயன்தரும்.
Be the first to rate this book.