ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு எதிர்பார்த்ததை விட அதிக எதிர் விளைவுகளையும் சந்தித்து, இத்தொழிலை விட்டுவிடலாம் என சோர்ந்து போனார்கள். விவசாயிகளின் சோர்வை நீக்கி, விழிப்பு உணர்வு கொடுக்கவே வந்தது ‘பசுமை விகடன்’ இதழ் நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்.
ஜீரோ பட்ஜெட் குறித்து வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் கொடுத்த பயிற்சிகள், உயிர் காக்கும் விவசாயத் தொழிலை மீட்டுத் தந்ததோடு, விவசாயிகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்தது. ஜீவாமிர்தம், பிரம்மாஸ்திரம், அக்னிஅஸ்திரம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், புளித்த மோர்க்கரைசல், எலுமிச்சை முட்டைக் கரைசல், மீன் அமினோ அமிலக் கரைசல் போன்ற இயற்கை உரம் தயார் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த சுபாஷ் பாலேக்கரது விவசாய நுணுக்கங்களைக் கையாண்டு விவசாயிகள் மேம்பட்ட மகசூல், அமோக விளைச்சல், மகத்தான லாபம் கண்டு வெற்றியின் உச்சத்தில் உள்ளனர்.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மல்லி, வாழை, ஆரஞ்சு, மாம்பழம், பாகல், கரும்பு, மஞ்சள், பப்பாளி முதற்கொண்டு அதற்கு ஊடுபயிராக பூக்கள், தானிய வகைகளைப் பயிரிட்டு அதிக லாபம் அடைந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தை பசுமை விகடனில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த வெற்றி அனுபவங்கள் இப்போது நூல் வடிவில் உங்கள் கையில் உள்ளது. இதேமுறையில் வெற்றியடைய விரும்பும் விவசாயிகளுக்கு இந்த நூல் வரப்பிரசாதமே!
Be the first to rate this book.