குட்டி ரேவதி கவிதைகள், சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன; கோபம் கொள்கின்றன; வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும் போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றால் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய்த் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவு கூருமாறு செய்கின்றன. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனமும் விடுதலை வேட்கையும் படிமங்களால் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் ஆகிய தளங்களில் ஒலிக்கும் ஏக்கம், நிராசை, காமம், மரணம், ஆற்றல், பரவசம், எழுச்சி, போராட்டம் போன்ற அனுபூதிகளால் குட்டி ரேவதி கவிதைகள் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு, பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கின்றன. பெண்ணிட மிருந்து விலக்கப்பட்ட சொற்களைத் துணிந்து உச்சரிக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளமாய்ப் பிரவகித்துப் பாய்கின்றன. பின், வெள்ளம் வடிந்ததும் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கும் எழுச்சியும் கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியிலிருந்து இக்கவிதைகள் பீறிடுகின்றன.
Be the first to rate this book.