மரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’! கொடூரக் கொலைகளையும், திசை அறியாது பதைபதைத்து ஓடும் அவலத்தையும், குண்டு வீச்சுகளைத் தாங்கித் தாங்கி ஈரம் காய்ந்துபோன மண்ணையும் ஒருங்கே கண்டு நடுங்கிய ஈழ தேசத்து மக்களின் பரிதாப நிலைகளை, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்கள் தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிட்டு, உண்மையை உலகறியச் செய்தன. இலங்கைத் தமிழர்களுக்கும், அவர்களின் வாழ்விடங்களை சீரழித்துவரும் சிங்களப் படையினருக்கும் உள்ள பல்வேறு நிலைப்பாடுகள் முதல், முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரன் எதிர்கொண்ட இறுதிப்போர் வரை நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்து, ‘ஈழம் இன்று!’ என்கிற தலைப்பில் ஏற்கெனவே நூலாக வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். அதிர்ச்சியூட்டும் புதிய உண்மைகள் அடங்கிய இரண்டாம் பாகம் இது. ஈழப் பிரச்னை, உலகலாவிய பிரச்னை ஆனதற்கான காரணம், தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது, போர்க் குற்றங்கள், இலங்கை அரசின் இன்றைய அரசியல் நிலை... என பல்வேறு தகவல்களை இந்த நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ப.திருமாவேலன். தன் நாட்டு மக்களையே கொடூரமாகக் கொன்று குவித்து, சிறிதும் குற்ற உணர்வே இல்லாமல், கொடுங்கோல் ஆட்சி நடத்திவரும் ராஜபக்ஷே சகோதரர்களின் கூட்டுச்சதியை அம்பலமாக்கும் முக்கிய சாட்சியமே இந்த நூல்.
Be the first to rate this book.