இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். தமிழகத்தில்... இந்திய அளவில்... உலக அளவில் என விரியும் இந்த உண்மைக் கதைகளில் மர்லின் மன்றோ, கென்னடி போன்ற உலகப் புகழ்பெற்ற பிரமுகர்கள் தொடங்கி, சைக்கோ கில்லர்கள் வரை அலசப்பட்டிருக்கிறார்கள்.
தலைப்பு சொல்கிறபடி, இதில் அலசப்பட்டக் குற்றங்கள் மிகுந்த திட்டமிடப்பட்டவை. இதில் வரும் குற்றவாளிகள் எல்லோரும் குற்றம் ‘புரிந்தவர்கள்’. அதாவது, புரிந்து செய்யப்பட்ட குற்றங்கள், கொலைகள். கண்டுபிடிக்க முனைந்தவர்களுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியவை. சில கண்டுபிடிக்க முடியாமலேயே போனவை. சட்டத்தின் முன் பெரிய கேள்விக் குறியை போட்டுவிட்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளிகளும் உண்டு. காரணம் இல்லாமல் தண்டனை அனுபவித்த நிரபராதிகளும் உண்டு. கண்டுபிடிப்பதில் உள்ள திருப்பங்களைப் போலவே குற்றம் செய்வதிலும் இத்தனை தினுசுகளா என ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. குற்றங்கள் சில சமயம் ஒரு புதிர் போட்டி போல அவிழ்க்கப்படுகின்றன. சுபாவின் சுவாரஸ்யமான நடை அந்த விறுவிறுப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
முத்தாய்ப்பாக மகாத்மா காந்தியின் படுகொலை ஆராயப்பட்டிருக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் அந்தப் படுகொலையின் பின்னணி நமக்குச் சொல்வது என்ன? அந்தப் பின்னணிக்கு மட்டும் அல்லாமல் உலகின் அத்தனை குற்றங்களுக்குமான காரணத்தை அந்தக் கடைசி அத்தியாயத்தில் அலசியிருக்கிறார். ‘அன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்’ என அழுத்தமாகச் சொல்லி முடித்திருக்கிறார் சுபா. குற்றம் புரியா சமூகம் அமையட்டும்!
Be the first to rate this book.