சாசனங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், தாமிரத்தகடுகள் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை கொண்டே நம் முன்னோர்களை பற்றியும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய பண்பாடு பழக்க வழக்கங்கள் பற்றியும் நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். தவிர அவையே நமக்கு வரலாற்று ஆதரமாக இன்றளவும் உள்ளது. இன்றைய விஞ்ஞான உலகத்திலோ ஆவணப்படங்களை மட்டுமே நிகழ்காலத்தில் துல்லியப் பதிவுகளாக கூற முடிகிறது. ஏனெனில் உண்மையை உள்ளது உள்ளபடி பதிவுசெய்கிற கலைவடிவமாக ஆவணப்படங்கள் விளங்குகின்றன. மிகைபடுத்தப்பட்டு அல்லது கற்பனையைக் கலந்து உருவாக்கப்பட்ட வேண்டிய தேவையோ, நிர்பந்தமோ ஆவணப்படங்களுக்கு இல்லாததுதான் அதன் தனித்தன்மை. ஒப்பீட்டு அளவில் தமிழில் தயாராகும் ஆவணப்படங்கள் வெகுஜன பார்வைக்கு பரவலாக சென்றடையாவிட்டாலும், எதிர்காலத்தில் மிகச் சிறப்பான இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆவணப்படங்களுக்கு நிகராக அல்ல, அதைவிட பன்மடங்கு அதிகமாகவே தமிழில் தற்போது குறும்படங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. படைப்பாக்கத்தில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களின் லட்சியத் திசையாக திரைப்பட துறையே இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுக்க அடிக்கடி குறும்படப் பட்டறைகள், குறும்படத் திரையிடல், அது குறித்து விவாத நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த நிலை மேலும் அதிகமாக வேண்டும் என்கின்ற அக்கறையின் காரணமாகவே தமிழில் வெளியான முக்கியமான சில ஆவணப்படங்களும் மற்றும் குறும்படங்களும் குறித்த அறிமுகமாக குறும்படங்களும் ஆவணப்படங்களும் என்ற நூல் எழுதபட்டிருக்கிறது.
Be the first to rate this book.