சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள நய ஒத்திசைவுகளோடு கூடிய ஒரு காப்பிய மரபையும் இப்புதினத்தில் காண முடியும்.
ஆயினும் காப்பியங்களில் முன்னிறுத்தப்படும் தனி மனித முக்கியத்துவம் இதில் இல்லை. முழுக்கவும் வெகு மக்களின் சமூக உறவுகளில் உள்ள உன்னதமான உணர்வெழுச்சிகளை முன்னிறுத்தி, அதன் மூலமாகத் தனது அறத்தை இப்புதினம் படைத்துக்கொள்கிறது. அதே வேளை இதன் நடையோட்டம் விதிகளுக்குட்பட்ட செய்யுள் நடையோட்டமாக இல்லை. வசனக் கவிதை மரபோ அல்லது புதுக்கவிதை மரபோ இதில் பிரித்துக் காண்பது கடினம். ஆயினும் நடையொழுக்கில் கவி நயமும் இசை நயமும் பின்னிப் பிணைந்திருப்பதால் ஒருவித புதிய உணர்வெழுச்சியைக் காணமுடியும். அந்த வகையில் இது புதிய காலத்திற்கான சிறிய அளவிலான ஒரு மக்கள் காப்பியம்.
Be the first to rate this book.