நூலகத்துக்கும் அலுவலகத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவேண்டிய கால்கள் இன்று முதலாவதாக மதுக் கடையை நோக்கிச் செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறதே காரணம் என்ன? குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசாங்கமே தன் குடிமக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சினிமாவும் மதுவை முதன்மைப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பது கவலைக்கிடமே. மதுவை நாடுபவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. மதுவாலும் அதை நாடுபவர்களாலும் விளைவது என்ன? இந்த நூல் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
பல குடும்பத்தில் கணவர், தகப்பன், பிள்ளை - என குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், மது என்னும் எமனுக்கு பலியாகி தன் குடும்பத்தினரின் வாழ்வை சின்னாபின்னமாக்கிச் செல்கிறார்கள். மது அடிமை என்ற நிலையில் இருந்து தன் கணவனை, தந்தையை, மகனை மீட்டெடுக்க ஒவ்வொரு தாயும், மனைவியும் சகோதரியும் படும் துயரம் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் ஒவ்வொரு கழிவறை. அந்தக் கழிவறையின் நாற்றத்தில் புரண்டு அங்கேயே நோயாளியாகி, வீட்டினரின் நல்வாழ்வையும் கெடுத்து விடுகிறார்கள். மக்கள் நலம் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும், பொது நல நோக்கோடு ஒவ்வொரு வரியிலும் ‘டாஸ்மாக்கை மூடு’ என்கிற கோரிக்கையை முன்வைத்து, அதற்கான காரணத்தை முன்வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மது இல்லா எதிர்காலம் உங்கள் கைகளில் என்பதை எடுத்துரைக்க காத்திருக்கிறது.
Be the first to rate this book.