'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் புதுமையான சுவையுடன் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். 'சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது' என்று சொன்ன பாரதியைப் பிரதிபலிப்பதாய் இந்நாவலின் கதை சொல்லும் பாணி, உக்தி, சுவை, எளிமை எல்லாமே புதிதுதான். இதுவரை வெளிவந்த அவரது நாவல்களான 'தந்திரபூமி', 'சுதந்திரபூமி, 'வேர்ப்பற்று', 'ஏசுவின் தோழர்கள்', 'குருதிப்புனல்' போன்றவற்றில் தன் அனுபவத்தையும், சமகால சமூக நிகழ்வுகளையும் பதிவு செய்தது போலன்றி இந்நாவல் நமக்குப் பரிச்சயமான பாரதக்கதையின் புதிய பதிவாகவும், அதே நேரத்தில் சமகால அரசியலை விமர்சிப்பதாகவும் வித்தியாசமான நடையில் அமைந்துள்ளது. உபதேசங்கள் ஏதுமில்லை. இந்நாவல் சமீப காலத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனை என்று கருதப்படுகிறது.
Be the first to rate this book.