கார்ப்பரேட் வாழ்க்கையில் அழுத்தங்களில் மூச்சுத் திணறி நகரத்தில் காலம் தள்ளும் ஒருவன் தன் சொந்த மண்ணில் சந்திக்கிற மரணத்தினையும், அதனையடுத்த நிகழ்வுகளையும் பாசாங்கில்லாமல் படம் பிடிக்கிறது. மரணத்தினை சுற்றிய மன உணர்வுகள், கொண்டாட்டங்கள், அரசியல்கள், உறவுகளுக்குள் தீர்க்கப்படாத வன்மம், சடங்குகளில் பேணப்படும் தொன்மம், எளிய மனிதர்களின் பெருந்தன்மை, நகைச்சுவை உணர்வு, கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, கெட்ட வார்த்தைகள், 'கெட்ட' ஜோக்குகள், சாதிகளின் பின்னுள்ள அரசியல், அரசியலின் பின்னுள்ள சாதி என பல தளங்களை போகிற போக்கில் தொட்டுச் செல்லும் ஜீவனுள்ள கதை. செல்லமுத்து குப்புசாமியின் முந்தைய நாவலில் முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதையைக் கொடுத்திருப்பார். இல்லையேல் கிராமத்துக் கதையைக் கொடுத்திருப்பார். இது கிராமமும், நகரமும் கலந்த கதை. கறந்த பாலினைப் போல கலப்பில்லாத கிராமத்து மொழியும், துரித உணவினைப் போன்ற விறுவிறுப்பான பெருநகரத்தின் மொழியும் இணைந்த மொழியின் தாளம் போடுகிறது கொட்டு மொழக்கு. இவரால் எதனையும் கேள்விக்கு உள்ளாக்க முடிகிறது. எதையும் எள்ளி நகையாட முடிகிறது. கதையும், சொல்லாடலும் நம்மை சந்தைப் பொருளாதாரத்தின் நாவுகள் இன்னும் முழுமையாக நீண்டிடாத கிராமத்து வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது.
Be the first to rate this book.