கொரிய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்குமுள்ள பண்டைய தொடர்புகள் பற்றிப் பேசும் இந்த நூல் ஓர் ஆற்றுப்படை நூல். இத்துறையில் ஆர்வமுள்ளோர் எவ்வெவ்வகையில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கோர் வழிகாட்டி போல் அமையும் நூல்.
அதே நேரத்தில் தமிழ் சரித்திரம், பண்பாடு இவற்றில் ஆர்வமுள்ளோருக்கு திருப்தியளிக்கும் வண்ணம் நிறையத் தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல்.
இந்த நூல் எப்படி நான் இந்த ஆய்விற்குள் நுழைந்தேன் எனும் சுயசரிதையாகவும் (பத்தாண்டுகள்) உள்ளது. எனவே சாதாரண வாசகனுக்கும் சுவையுள்ள வகையில் இந்த நூல் அமைகிறது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழு இந்த ஆய்விற்கு பரந்த மேடையை அமைத்துக் கொடுத்ததால் முனைவர் சுபாஷினி அவர்கள் ஓர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
இந்த ஆய்வை முன்னெடுத்துச் செல்வதில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் நண்பர் ஒரிசா பாலு அவர்கள். அவரும் ஓர் அணிந்துரை வழங்கியுள்ளார்.
தென்கிழக்கு, தூரக்கிழக்கிற்கு புத்த நெறியைக் கொண்டு சென்றதில் தமிழர்களின் பங்கு அதிகம். அதை வலியுறுத்தும் வகையில் இத்துறையில் தேர்ந்த கௌதம சன்னா அவர்களும் ஓர் அணிந்துரை வழங்கியுள்ளார்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழகப் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வண்ணம் கொரிய நாட்டை ஆற்றுப்படுத்துவது. அந்த நல்ல நோக்கைப் புரிந்து கொண்டு இந்த ஆய்வை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றவர் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர் பசும்பொன் அவர்கள். அவர்களுக்கு நன்றி.
சங்கம் கொண்டாடிய வையை நதி தீரத்தின் கதை. தமிழ்க் கடலோடிகளின் கதை. உலக வணிகத்தில் முக்கிய பங்காற்றிய பண்டைத் தமிழனின் கதை. திருப்பாச்சேத்தி இரும்பு தொழில்நுட்பம் தூரக்கிழக்குவரை சென்ற கதை. தொல்லியல் என்றால் மண்ணிற்குள் புதை பட வேண்டுமென்ற கட்டாயமில்லை. நெஞ்சுக்குள் புதைந்து போன தூரத்து உறவின் கதை இது.
செம்பவளம் எனும் தமிழச்சியின் கதை இது!
Be the first to rate this book.