"கவிஞர்"
அழகு நிலையங்களில் உலாவுவதைத் தவிர
வேறெதுவும் செய்வதில்லை
அல்லது வழிதவறிய அணிலொன்றிற்காக ஒரு பிரார்த்தனை
அல்லது கழிப்பறை சுவரில் வளரும் ஆலமரத்தின்
எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்
மேலும் எதிர்வரும் அனைவர்மீதும் குறைபட்டுக் கொள்கிறார்
குருடனின் போகத்தில் பெருகும் சூனியத்தை
நினைத்தேங்குகிறார் குடிபோதையில்
(பொறாமைப் படவும் முடிகிறதவரால்)
கூந்தல் கவிஞர் தனது உடலை
பூமியெனப் பிரகடனப் படுத்தும்போது
மீசைக் கவிஞர் நெம்புகோல் தத்துவத்தைப் போதிக்கிறார்
மாற்றம் கூட மாறிப்போகும் வாய்ப்பினை வியந்து
தனது நேரத்தை நெய்கிறார்
பிறகு பேனாவை எடுத்து ஒரு தவறைத் திருத்த முயல்கிறார்
உபரியாய்க் கிடைத்து விடுகிறது ஒரு கவிதை
Be the first to rate this book.